சென்னை:செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம், லியோ. விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார்.
மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இப்படம் இன்று (அக்.19) வெளியாகி உள்ளது. இருப்பினும், தமிழ்நாட்டில் காலை 9 மணி முதலே காட்சிகளுக்கு அனுமதி என்பதால், ரசிகர்கள் திரையரங்க வாயிலில் கொண்டாட்டங்களுடன் காத்திருக்கின்றனர். ஆனால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளில் காலை 4 மணிக்கே லியோ வெளியானது.
இதனைப் பார்த்த ரசிகர்கள், X, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். முக்கியமாக, லியோ திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் (LCU) இணையுமா என்ற கேள்விக்கான பதிலையும் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக, நேற்று இரவு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கடிதம் ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், லியோ திரைப்படம் LCU-வில் இணையுமா என்பதற்கு இன்னும் சில மணி நேரங்களில் விடை தெரியும் என குறிப்பிட்டு இருந்தார். மேலும், அதில் நடிகர் விஜய்க்கு நன்றியையும் லோகேஷ் தெரிவித்து இருந்தார்.