சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம், லியோ (Leo). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) S.S.லலித்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதுடன், சாதனை படைத்தும் வருகிறது. இந்த நிலையில், இப்படம் ஐமேக்ஸ் திரையரங்கில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து படத்தயாரிப்பு நிறுவனமும் உறுதி செய்துள்ளது.
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அக்டோபர் 19ஆம் தேதி 'லியோ' திரைப்படத்தின் பிரத்யேகமான ஐமேக்ஸ் ரிலீஸ் இந்தியா முழுவதும் உள்ள கூடுதல் சந்தைகளிலும் வெளியிடுவதை அறிவிப்பதில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மகிழ்கிறது.
இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவையும் சேர்த்து அங்குள்ள ஐமேக்ஸ் வசதியுள்ள இடங்களில் 'லியோ' ரிலீஸாக இருக்கிறது. இதுவரை ஐமேக்ஸில் திரையிடப்படும் மூன்றாவது தமிழ் திரைப்படம் லியோ ஆகும்.
தொடர்ந்து தரமான திரையரங்கு அனுபவத்தை உலகம் எங்கிலும் உள்ள ரசிகர்களுக்கு வழங்கி வரும் ஐமேக்ஸ் உடன் பணிபுரிவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மேலும், விஜய்யின் கச்சிதமான நடிப்பாற்றலை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் ரசிகர்கள் பார்த்து ரசிக்க இயலும்.
ஐமேக்ஸ் அல்ட்ரா ஸ்கிரீன் மற்றும் தரமான ஒலிநுட்பம் ஆகியவற்றுடன் இணைந்து வரும் 'லியோ' படத்தின் ஆக்சன் காட்சிகளுடன் சென்னை மற்றும் காஷ்மீரின் அழகான லொக்கேசன்களும் ரசிகர்களைப் பிரமிக்க வைக்க காத்திருக்கிறது. இந்தப் படம் 26 இடங்கள் வரை ஐமேக்ஸ் நெட்வொர்க் இந்தியாவின் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது. அக்டோபர் 19-இல் 'லியோ' திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாக இருக்கும் நிலையில், நாளை (அக் 14) முதல் டிக்கெட்டுகள் விற்பனை துவங்க உள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மதுரை விஜய் ரசிகர்களுக்கு எச்சரிக்கை.. லியோ சிறப்பு காட்சி பெயரில் போலி டிக்கெட் விற்பனை!