ஹைதராபாத்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம், லியோ. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ - லலித் குமார் மற்றும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் இணைந்து இப்படத்தை தயாரித்து உள்ளனர். லியோ திரைப்படம் ஆங்கிலத்தில் வெளியான ஹிஸ்டரி ஆஃப் வைலன்ஸ் படத்தின் தழுவலாக உருவாகி உள்ளது.
மேலும், ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸிலும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. லியோ திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே, அதிக அளவில் வசூல் பெற்று சாதனை படைத்தது. முதல் நாள் வசூலில் உலகம் முழுவதும் ரூ.148.5 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளியானது. உலக அளவில், இந்திய படம் பெற்ற அதிகபட்ச வசூல் என்றும் கூறப்பட்டு வருகிறது.