சென்னை: மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் K.கந்தசாமி மற்றும் K.கணேசன் இணைந்து தயாரித்த படம் 'வட்டார வழக்கு'. இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் 'டூ லெட்' சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து இயக்குநரும், தயாரிப்பாளருமான கண்ணுச்சாமி ராமச்சந்திரன் கூறுகையில், “இது 1985ஆம் ஆண்டு நடப்பது போன்ற கதையைக் கொண்ட படம். உறவினர்களுக்குள் நடைபெறும் பிரச்சினையை வைத்து உருவாகி உள்ளது. குறிப்பிட்ட வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இப்படம் பேசுவதால் படத்திற்கு 'வட்டார வழக்கு' எனப் பெயரிடப்பட்டுள்ளது.
மதுரைக்கு மேற்கு பகுதியில் இருக்கும் கிராமத்துப் பின்னணியில் படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் கதை உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகி உள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். அவரது இசை படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்துள்ளது.