சென்னை:இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள லியோ திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (அக்.19) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. விஜய் நடித்து உள்ள இப்படத்தை, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இணைந்து நடித்து உள்ளனர். மேலும், லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்னதாக எடுத்த திரைப்படங்கள், ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், லியோ திரைப்படத்தின் மீதும் அதே எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
அதேநேரம், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எனப்படும் எல்சியு (LCU)-வில் லியோ இணையுமா என்ற கேள்வியும் படத்தின் பூஜை முதலே இருந்து வருகிறது. இருப்பினும், அதனை சஸ்பென்ஸாகவே படக்குழு இன்றும் வைத்துள்ளது. இந்த நிலையில்தான், இந்த எதிர்பார்ப்புக்கான ஒரு சைகையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காண்பித்துள்ளார்.
இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட X வலைத்தளப் பதிவில், “தளபதி விஜய் அண்ணாவின் லியோ, லோகேஷ் கனகராஜின் அற்புதமான படைப்பாக்கம், அனிருத் இசையில், அன்பறிவு மாஸ்டரின் ஒன்றிணைப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, வாழ்த்துகள்” என பதிவிட்டு உள்ளார். அது மட்டுமல்லாமல், #LCU என்ற ஹேஷ்டேக்கையும் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு, ஸ்மைலி ஸ்டிக்கரையும் குறிப்பிட்டு உள்ளார்.
இதனால், லியோ படம் LCU-வில் நிச்சயமாக இணையும் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அவ்வாறு லியோ படத்தில் LCU காட்சிகள் இடம் பெற்றால், திரையரங்கத்தில் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு எப்படி இருக்கும் என்ற வகையிலும், மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களில் வட்டமிட்டு வருகின்றன.
இதனிடையே, லியோ திரைப்படத்தின் அதிகாலை காட்சி விவகாரம் நீதிமன்றம் வரை சென்று, மீண்டும் தமிழ்நாடு அரசிடம் வந்து உள்ளது. மேலும், லியோ திரைப்பட விவகாரம் குறித்து, ஆளும் திமுக அரசின் அமைச்சர்கள், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:லியோ படம் வெற்றி பெற விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை!