உலகம் முழுவதும் பொன்னியின் செல்வன் படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் முன்னணி நடிகர்கள் சரத்குமார், கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி உள்பட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நெல்லை மாவட்டம் காவல்கிணறு திரையரங்கில் நடிகர் சரத்குமார் ரசிகர்களுடன் கண்டு ரசித்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் கூறியதாவது, வரலாற்று நாவலை திரைப்படமாக காண்பது சிறப்பு. கல்கியின் கதை தெரிந்தவர்கள் இத்திரைப்படத்தை எளிதாக அறிந்து கொள்வர். இத்திரைப்படத்தை காண்பவர்கள் கல்கியின் நாவலை காவியமாக கருதுவர். நாவலை படிக்காதவர்களுக்கு திரைப்படத்தால் கதையின் ஓட்டத்தன்மையும், அடிப்படையும் புரிய வரும். நாவலை படிக்காதவர்களுக்கு ஆவலை தூண்டும்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதையை மணிரத்னம் சிறப்பாக இயக்கி உள்ளார். பாகுபலி சிறந்ததா பொன்னியின் செல்வன் சிறந்ததா என்கிற போட்டியே வேண்டாம். ரசிகர்கள் ஒற்றுமையுடன் படைப்பாளிகளின் படைப்புகளை பார்க்கவேண்டும். கதையை படித்தவர்கள் படிக்காதவர்கள் என்று பிரித்து பார்க்காமல் அனைவரும் பார்க்க வேண்டும்.
நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்து உள்ளார்கள் என்று அறிய இது ஒரு நல்ல வாய்ப்பு. இப்போது உள்ள இளைஞர்கள் அதிக புத்திசாலிகள் கதைகளை படிக்காமலேயே புரியும் தன்மை உள்ளவர்கள் இந்த பகுதி சிறிய கிராம பகுதியாக இருந்தாலும் இங்குள்ள மக்கள் ரசித்து பார்ப்பதே இந்த படத்தின் வெற்றி . மேலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இதைவிட சிறப்பாக இருக்கும்.