சென்னை: தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது படத்தை தணிக்கை செய்வதற்கு லஞ்சம் கொடுக்க நேர்கிறதா என்கிற கேள்விக்கு, “சென்னை தணிக்கை அலுவலகத்தில் எந்த தயாரிப்பாளரும் படத்தை தணிக்கை செய்வதற்கு லஞ்சம் கொடுத்ததில்லை. அப்படி ஒரு சூழ்நிலையாக கசப்பான அனுபவம் உருவாகவில்லை.
சித்தார்த் விவகாரத்திற்கு கர்நாடக நடிகர் சிவராஜ்குமார் வருத்தம் தெரிவித்துவிட்டார். அது பற்றி நாங்கள் கருத்து சொல்லி பெரிதாக்க விரும்பவில்லை. மேலும் நடிகர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க தயாரிப்பாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளது” என தெரிவித்தனர்.
இதனையடுத்து, தமிழ் திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் வெளிப்படையாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரக் கூடாது என கர்நாடகாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், எனவே அவர்களுக்கு இங்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமா என்கிற கேள்விக்கு, “தமிழக அரசு என்ன கொள்கை முடிவு எடுத்தாலும், நாங்கள் அதற்கு கட்டுப்படத் தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார். மேலும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் கோரிக்கைகள்,
- தற்போது 4 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என்கிற விதி நடைமுறையில் உள்ளது. குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.
- தரமணியில் கூடுதல் சினிமாத் தளங்கள் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க வேண்டும். குறைந்தபட்சம் 25 ஆயிரம் நபர்கள் அமரும் வகையில் கலையரங்கம் அமைக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 2015 முதல் 2022 வரை 7 ஆண்டுகளாக வழங்கப்படாத தமிழக அரசின் விருதுகளும், சிறு பட்ஜெட் திரைப்படங்களுக்கு மானியங்களும் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தணிக்கை சான்றுகளை மும்பை சென்று, பின் சென்னை வந்து பெற வேண்டி உள்ள நிலையில், சென்னையிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிறிய பட்ஜெட் படங்களையும் ஒடிடி நிறுவனங்கள் வாங்க வேண்டும்.
இதையும் படிங்க:இந்த ரெட் பட்டனா! இணையத்தை வட்டமடிக்கும் ரஜினியின் க்யூட் செல்பி வீடியோ!