டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முதல் இடத்தைப் பிடித்து வரும் நிகழ்ச்சியான பிக்பாஸின் 6ஆவது சீசன் இன்று (அக்-9) முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் குறித்து தகவல்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.
இதுவரை நடந்த 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இருப்பினும் 5 சீசன் போட்டியாளர்கள் இணைந்து பங்கேற்ற பிக்பாஸ் அல்டிமேட்டில் பாதியில் கமல்ஹாசனால் தொகுத்து வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதால், நடிகர் சிலம்பரசன் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இதுவரை வெளியான சீசனில் இருந்து ஓவியா, ஆரி, மற்றும் பலருக்கு ரசிகர்கள் குவிந்து அவர்களுக்கென தனியாக ஆர்மியே உருவாக்கி கொண்டாடினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கும், சுவாரஸ்யங்களுக்கும் என்றைக்கும் பஞ்சம் இருந்ததில்லை. அந்த வகையில் தற்போது பலர் இந்த நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பிரபலங்கள் தவிர, பொதுமக்கள் சிலரும் இந்த சீசனில் களமிறங்க உள்ளதாக புரோமோக்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் புரோமோ வர ஆரம்பித்ததில் இருந்து பல இடங்களில் ஆடிஷன் நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பிக்பாஸ் ஆரம்பித்த முதல் சீசனில் இருந்தே பல தரப்பு ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை விரும்ப ஆரம்பித்தனர்.