உங்கள் உடல்நிலை எப்படி இருக்கிறது சமந்தா?
உடல்நிலை பற்றி விசாரித்ததற்கு நன்றி. நான் நன்றாக தேறி வருகிறேன். சீக்கிரமாக பரிபூரணமாக நலம் பெறுவேன். அதேநேரம் 'யசோதா' படம் வெளியாவதில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
'யசோதா' படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
மகிழ்ச்சியாக இருக்கிறது. அதேசமயம் சிறிது படபடப்பும் இருக்கிறது. நீங்கள் ட்ரெய்லர் மற்றும் டீஸரில் பார்த்துள்ள காட்சிகளைத்தாண்டி இன்னும் பிரமாண்டமாக படம் இருக்கும். ட்ரெய்லர் போலவே படத்திற்கும் பார்வையாளர்கள் தரும் அன்பிற்காகக் காத்திருக்கிறேன்.
'யசோதா' கதை கேட்டதும் என்ன நினைத்தீர்கள்? எந்த ஒரு விஷயம் இந்தப் படத்தை நீங்கள் ஒத்துக் கொள்ள வைத்தது? 'யசோதா' போன்ற ஒரு கதை, உடனடியாக செய்ய விரும்பக் கூடிய படம். வழக்கமாக ஒரு கதையை கேட்ட பிறகு அதை ஒப்புக்கொள்ள ஒருநாள் எடுத்துக்கொள்வேன். ஆனால், யசோதா கதையை கேட்ட உடனேயே எந்த ஒரு யோசனையும் இல்லாமல் ஒப்புக்கொண்டேன். அந்த அளவிற்கு கதை வலுப்பெற்றதாக இருந்தது. இந்த வலுவான கதையை பார்வையாளர்களும் அனுபவிக்க வேண்டும். இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரிஷ் புதிய கான்செப்ட்டை உருவாக்கி உள்ளனர்.
புராண கால 'யசோதா'-வில் இருந்து தற்போதைய 'யசோதா' எந்த அளவுக்கு வேறுபடுகிறார்?இருவரும் அம்மா, பெண் என்பதைத் தாண்டி இரண்டு பேரும் நிறைய பேரைக் காப்பாற்றுவார்கள். கிருஷ்ணரை வளர்த்த யசோதாவும் தாய் தான். இந்தப் படம் பார்த்ததும் நான் சொல்வதை அனைவரும் நிச்சயம் ஒத்துக் கொள்வீர்கள்.
வாடகைத்தாய் விஷயம் சமீபத்தில் அதிகம் பேசப்பட்டது. இது குறித்து உங்களுடைய கருத்து? வாடகைத்தாய் குறித்த வலுவான கருத்து என்னிடம் கிடையாது. நான் புரிந்து வைத்துள்ள வரைக்கும் பெற்றோர் ஆக விரும்பும் அளவுக்கு அது ஒரு தீர்வு, நம்பிக்கை.
ட்ரெய்லரில் வாடகைத்தாய் பற்றி மட்டும் இல்லாமல், அதில் நடக்கும் குற்றங்கள் குறித்தும் பேசியதாகத் தெரிகிறதே?நான் இப்போது படம் குறித்து ஏதாவது தெரியப்படுத்தினால் அது படம் பார்க்கும் மொத்த அனுபவத்தையும் கெடுத்து விடும். இது ஒரு நல்ல த்ரில்லர் கதை. இந்தப் படத்தில் வேலை செய்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் முழு உழைப்பைக்கொடுத்து இருக்கிறார்கள். திரைக்கதையை இயக்குநர்கள் எழுதிய விதம், இதில் உள்ள சண்டைக் காட்சிகள், செட், இசை என எல்லாமே நீங்கள் பெரியத் திரையில் பார்த்து ரசிக்க வேண்டும்.
பல வித்தியாசமான ஜானர்களில் நடித்துள்ளீர்கள், ஆக்ஷன் த்ரில்லர் எந்த அளவுக்கு உங்களுக்குப் பிடித்திருக்கிறது? ஒரு படம் முடித்துவிட்டு அடுத்த கதை கேட்கும்போது நிச்சயம் வித்தியாசமானதாக இருக்க வேண்டும் என்று விரும்புவேன். 'யசோதா'-வுக்கு முன்பு நான் செய்த 'யூ-டர்ன்' படம் ஒரு த்ரில்லர் கதை தான். ஆக்ஷனை பொருத்த வரைக்கும், 'ஃபேமிலி மேன்' கதையில் நான் செய்த ராஜீ தான் முதல் ஆக்ஷன் கதாபாத்திரம். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு ஆக்ஷன் செய்வது மிகவும் பிடித்திருக்கிறது.
'யசோதா' ஆக்ஷன் காட்சிகளுக்காக என்ன மாதிரியான பயிற்சிகளை எடுத்தீர்கள்?
நானும் சண்டைப் பயிற்சியாளர் யானிக் பென் இருவரும் ‘தி ஃபேமிலிமேன்’ இணையத் தொடருக்காக இணைந்து வேலை செய்தோம். பாக்ஸிங், கிக் பாக்ஸிங் இதெல்லாம் அந்த கதாபாத்திரத்திற்காகக் கற்றுக்கொண்டேன். ஆக்ஷன் காட்சிகள் நடிப்பதற்கு நிறைய பொறுமையும், பயிற்சியும் தேவைப்படுகிறது. ’யசோதா’ படத்தில் நான் கர்ப்பிணியாக, ஒரு சாதரணமான பெண்ணாக நடித்திருக்கிறேன். அதனால், இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றபடியான ஆக்ஷன் காட்சிகள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. யானிக் மற்றும் வெங்கட் இருவரும் முடிந்த அளவிற்கு சண்டைக் காட்சிகளை இயல்பாக இருக்கும்படி பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். நானும் அதற்கேற்றபடி பயிற்சி எடுத்து நன்றாகவே நடத்திருக்கிறேன்.
வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்டோருடன் நடித்த அனுபவம் பற்றி கூறுங்களேன்?
இவர்கள் அனைவருடனும் சேர்ந்து நடித்தது உண்மையில் நல்லதொரு அனுபவம். இதுபோன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொண்டேன்.
பான் இந்தியா படமாக வெளியிடும் திட்டம் ஆரம்பத்திலேயே இருந்ததா அல்லது இறுதியில் எடுத்த முடிவா? இந்தக்கதை வலுவான உணர்வுகளைக்கொண்டுள்ளது மற்றும் பார்வையாளர்களையும் இது கட்டிப்போடும் விதமாக அமையும். இதை கதையின் ஆரம்பத்தில் இருந்தே ஐந்து மொழிகளிலும் வெளியிட முடிவெடுத்தோம். ‘பான் இந்தியா’ என்பது இப்போது ஐந்து மொழிகளில் வெளியாகும் படத்தைக்கூப்பிடும் ஒரு வார்த்தை ஆகி விட்டது. நிச்சயம், இது பான் - இந்தியா அளவில் வெற்றியும் பெறும்.
தமிழ், மலையாளம் என அனைத்து மொழிகளில் இருந்து வரும் ரெஸ்பான்ஸ்களை கவனித்து வருகிறீர்களா? ஆமாம்! உண்மையை சொல்ல வேண்டும் என்றால், மொழிகள் கடந்து இந்தப் படத்திற்கு வரும் ரெஸ்பான்ஸ் நன்றாகவே இருக்கிறது. ஒவ்வொரு மொழிகளிலும் பார்வையாளர்களுக்கு அவர்கள் கலாசாரத்திற்கு ஏற்றபடி தனிப்பட்ட ரசனை இருக்கிறது. மொழிகள் கடந்து இந்தப் படத்தின் ட்ரெய்லரை பலரிடமும் எடுத்துச்சென்ற என்னுடைய சக நண்பர்களான நடிகர்கள் விஜய் தேவரகொண்டா, துல்கர், ரக்ஷித் ஷெட்டி மற்றும் வருண் ஆகியோருக்கு நன்றி.
இந்தப் படத்தின் டப்பிங்கை ட்ரிப்ஸ் ஏற்றிக்கொண்டே செய்ததாக தகவல் வெளியானதே? நானே இந்தப் படத்திற்கு டப் செய்ய வேண்டும் என்று முன்பே முடிவெடுத்துவிட்டேன். ஒரு நடிகர் ஒரு கதாபாத்திரத்தை பிடித்து செய்யும்போது, அதற்கான குரலும் அவர்கள் தான் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அதைத்தான் நானும் செய்திருக்கிறேன். ஆனால், எனக்கு உடல்நிலை சரியில்லாத சமயத்தில் இது சவாலானதாக இருந்தாலும் டப் செய்ததில் மகிழ்ச்சிதான்.
'யசோதா' தவிர்த்து வேறு யாருடைய கதாபாத்திரம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது?
வரலட்சுமி சரத்குமாரின் கதாபாத்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. அவருடைய கதாபாத்திரம் எழுதிய விதமே எனக்குப் பிடித்திருந்தது. இதற்கு மேல் நான் எதுவும் சொன்னால் அது ஸ்பாய்லர் ஆகிவிடும். அதை ஏன் நான் சொல்கிறேன் என படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும்.
இறுதியாக உங்கள் உடல்நிலை குறித்து ரசிகர்களுக்குச்சொல்ல விரும்புவது என்ன?
என் மீது நீங்கள் காட்டிய அன்பு, பிரார்த்தனை மற்றும் ஆதரவுக்கு நன்றி. நன்றாக தேறி வருகிறேன். இது ஒரு போர்க்களம். இதில் நான் சண்டையிடுவதற்கான வலுவான அனைத்தையும் நீங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள் என புன்புறுவலுடன் முடித்துக்கொண்டார்.
இதையும் படிங்க :பொங்கலுக்கு துணிவு படத்தைத் தான் பார்ப்பேன் - நாஞ்சில் சம்பத்