சென்னை: ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற "ஹூகும்- தலைவர் அலப்பறை" பாடல், இந்திய அளவில் ஸ்பாட்டிஃபை செயலியில் முதல் இடத்தை பிடித்துள்ளதாகவும், முதன்முறையாக தென்னிந்தியாவில் ஜெயிலர் படத்தின் "ஹூகும்- தலைவர் அலப்பறை" பாடல் முதலிடம் பிடித்து உள்ளதாக படக்குழு இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் உலகம் முழுவதும் சுமார் 7,000 திரையரங்குகளில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் சிறப்பு வேடங்களில் தோன்றினர். மேலும் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் இப்படம் வெளியிடப்பட்ட மூன்றே நாட்களில் ரூ.100 கோடி வசூலை தாண்டியது. தற்போது ஆகஸ்ட் 17 வரை எட்டு நாள் மொத்த வசூல், இந்தியாவில் ரூ. 235.65 கோடியாக உள்ளது என படக்குழுவினர் தொிவித்து உள்ளனர்.
அனிருத் இசையில் ஜெயிலர் படத்தின் பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பாகவே நல்ல வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படத்தின் முதல் பாடலாக வெளியான காவாலா பாடல் இளைஞர்களை கவர்ந்தது. சூப்பர் ஸ்டாரின் படத்தில் தமன்னாவை முதன்மையாக கொண்டு முதல் சிங்கிள் பாடல் வெளியாவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால் தமன்னா நடனத்துடன் வெளியான காவாலா பாடல் ஜெயிலர் படத்தின் ப்ரமோஷனுக்கு நல்ல ஆரம்பமாக அமைந்தது. படம் வெளியான பிறகு காவாலா பாடல் உலக அளவில் ட்ரெண்ட் அடித்தது. ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி காவாலா பாடலுக்கு நடனமாடி தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிகாந்தை நேசிப்பதாக தலைப்பிட்டு பகிர்ந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
காவாலா பாடல் ஒருபுறம் ட்ரெண்டிங்கில் இருக்க, தற்போது ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்படும் "ஹூகும்- தலைவர் அலப்பறை" பாடல் இந்திய அளவில் ஸ்பாட்டிஃபை-ல் முதல் இடத்தை பிடித்துள்ளதாக படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது ரஜினி ரசிகர்களிடம் மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Jailer Kavala Song: உள்ளூர் நடிகர்கள் தொடங்கி உலக அளவில் வைப் ஏற்றும் ’காவாலா’ பாடல்!!