சென்னை: தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல், வருகிற 30ஆம் தேதி அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலானது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில், தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமியும், மற்றொரு அணியில் மன்னனும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் தேர்தல் அதிகாரிக்கு, தயாரிப்பாளர் கேயார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 - 2026ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி, அடையாறில் உள்ள அன்னை சத்யா (ஸ்டுடியோ) கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு போதுமான இட வசதி இல்லை. கடந்த முறையும் அங்குதான் தேர்தல் நடைபெற்றது.
அப்போது வாக்களிக்க வந்தவர்களின் வாகனங்களைக் கூட அங்கு நிறுத்த முடியவில்லை. எல்லோரும் நெருக்கி அடித்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதில் ‘சின்ன தம்பி’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கேபி பிலிம்ஸ் பாலு, உடல்நிலை பாதிக்கப்பட்டு, மறுநாளே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கரோனா தொற்று என கண்டறியப்பட்டு, உயிரையே இழந்து விட்டார் என்பது வேதனையான உண்மை. இப்போதும் அதே போல கரோனா பரவும் காலம் தொடங்கி இருக்கிறது.
அதைவிட கொடுமையான வெயில் காலமாக இருக்கிறது. இந்த முறை, ஆயிரத்து 406 தயாரிப்பாளர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர். குறைந்தது, ஆயிரத்து 200 பேர் தேர்தலில் வாக்களிக்க வருவார்கள். அத்தனை பேரும் கார்களில் வந்து இறங்குவதற்கும், நிறுத்துவதற்குமான இட வசதி அங்கு இல்லை. அத்துடன், பிரபல நடிகர்களும், இயக்குனர்களும் வாக்களிக்க வரும்போது, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஏற்ற சூழலும் அங்கு இல்லை.