சென்னை: இது தொடர்பாக செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்டு உள்ள ‘X' வலைதளப் பதிவில், “பாஸ் வேண்டும் என்று அதிகமான பேர் கோரிக்கை வைப்பதாலும் மற்றும் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டும், லியோ இசை வெளியீட்டை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து உள்ளோம். ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்கள் உடன் உங்களோடு தொடர்பில் இருப்போம். மேலும், பலர் நினைப்பதுபோல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” என தெரிவித்து உள்ளனர்.
மேலும், இது தொடர்பாக லியோ படத்தின் இணை தயாரிப்பாளர் ஜெகதீஷ் வெளியிட்டு உள்ள ’X' வலைத்தளப் பதிவில், “இது மிகவும் கடினமான முடிவு. ஒவ்வொரு ரசிகரும் கடந்து செல்லும் அதே அளவிலான ஏமாற்றத்தை நாங்கள் உணர்கிறோம். பல்வேறு விருப்பங்கள் மற்றும் மிகப்பெரிய முயற்சிகள் இருந்தபோதிலும், நாங்கள் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டி இருந்தது. டிக்கெட்டின் தேவை மற்றும் விருந்தினர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது” என தெரிவித்து உள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து உள்ள படம், லியோ. மாஸ்டர் படத்திற்குப் பிறகு விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இதில் அமைந்து உள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. மேலும், இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், மன்சூர் அலிகான், அர்ஜுன் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்து உள்ளது.