சென்னை: சாலிகிராமம் பகுதியில் உள்ள பிரசாத் லேபில் முடக்கறுத்தான் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் சமுத்திரக்கனி, இயக்குநர் தங்கர்பச்சான், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். மேடையில், திரைப்பட குழுவினருக்குப் பொன்னாடை போற்றுவதற்குப் பதிலாக அவலக்காய், மகிலி கீரைகளைப் பரிசாக வழங்கினார் இயக்குநர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் டாக்டர் வீர பாபு, “மருத்துவத் துறையைச் சேர்ந்த ஒருவன் எதற்கு சினிமா துறைக்கு என்ற கேள்விக்கு, சூழ்நிலை சாதகமாக வந்தது அதான் உள்ளே வந்து இருக்கிறோம். இந்த படத்தில் அரசியல்வாதிகளிடமும், அதிகாரிகளிடமும் ஒரு கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மூடப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை எல்லாம் முன் வைக்கவில்லை. காரணம், அரசியல்வாதிகள் தான் டாஸ்மாக் வைத்து இருக்கிறார்கள். எனவே, டாஸ்மாக் மூடுவது கண்டிப்பாக முடியாத ஒரு காரியம்.
அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் ரூ.1000, 2000 மற்றும் மிக்ஸி போன்ற பொருட்கள் வழங்கப்படும் என்று கூறாமல் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தடுக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுக்க வேண்டும். காவல் துறை குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்று சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும். நோட்டு, ஓட்டு இது இரண்டை நோக்கித்தான் அரசியல்வாதிகள் வாழ்க்கைப் பயணம் சென்று கொண்டு இருக்கிறது. திரைப்படம் வாயிலாக சமூகப் பிரச்னைகளைத் தெரிவிக்க வேண்டும்” என்று நினைக்கிறேன்.
மேடையில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “கரோனா கால கட்டத்தில் வீர பாபு மீடியா நண்பர்கள் யாருக்கும் 10காசு வாங்காமல் மருத்துவம் செய்தார். ஒரு படத்தில் சமூகம் மாற்றம் உண்டாக வேண்டும் என்று அவர் என்ன நினைத்தாரோ அதைச் சிறப்பாகப் பண்ணி இருக்கிறார். சாலைகளில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள் குழந்தைகளைத் திருடி வந்து பணத்திற்காகப் பிச்சை எடுக்கிறார்கள். எனவே, அவற்றை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
மேடையில் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “இந்த மாறி சின்னப் படங்கள் எடுத்து ரிலீஸ் பண்ணுவது கஷ்டம். சாலைகளில் பிச்சை எடுக்கும் குழந்தைகளைப் பற்றிய படம் இது. படத்தைப் பார்த்த பிறகு, சென்னை மற்றும் ஹைதராபாத் நகரில் சாலையில் பிச்சை எடுக்கும் குழந்தைகளைப் பார்க்கும் போது பதற்றமாக இருக்கும். வீர பாபு ஒரு சிறந்த மருத்துவர் என்பதை எனக்குச் சிகிச்சை வழங்கியதன் மூலம் நான் அறிந்தேன்” என்றார்.
மேடையில் பேசிய இயக்குநர் தங்கர்பச்சான், “இந்த படத்தை எல்லாரும் பார்க்கவேண்டும். வீர பாபு போன்ற மாமனிதர் திரைத்துறைக்கு வரணுமா என்று நினைத்ததில் நானும் ஒருவர். திரைப்படக் கலை மக்களை மேம்படுத்த உருவாக்கப்பட்டது. ஆனால் அது தற்போது அப்படி இல்லை.
எந்த படம் நமக்குப் பின்னடைவாக இருக்கிறதோ அதையே ஊக்குவிப்பார்கள் நம் தமிழர்கள். இந்த படம் மக்களைப் பற்றியும், மண்ணைப் பற்றியும் அக்கறை உள்ள படம். வீர பாபு போன்ற ஒருவர் தமிழ் மண்ணிற்குக் கிடைத்த ஒரு பெரிய கொடை. தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும் இரண்டு கடைகள் டாஸ்மாக் கடைகள் மற்றும் மருந்துக் கடைகள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இலங்கை விமானம் திடீர் ரத்து.. 140 பயணிகள் சென்னை விமான நிலையத்தில் தவிப்பு!