சென்னை:தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான மன்சூர் அலிகான், சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சையான கருத்துக்களை பதிவிட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து நடிகை த்ரிஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், மன்சூர் அலிகான் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து “மன்சூர் அலிகான் பெண்களுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியுள்ளார். இனி அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன். இதுவரை நடிக்காததை நினைத்து நிம்மதி அடைகிறேன். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, நடிகரான மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகை குஷ்பூ, சிரஞ்சீவி உள்ளிட்ட பல திரைப் பிரபலங்கள் சமூக வலைத்தளத்தில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். ஆனால், தான் எதுவும் தவறாகப் பேசவில்லை என மன்சூர் அலிகான் விளக்கம் அளித்தார். இதனிடையே தேசிய மகளிர் ஆணையம் நடிகர் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பியது.
இதனையடுத்து, மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர். இதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் தலைமறைவாகி உள்ளார் என தகவல் வெளியான நிலையில், அதற்கு மறுப்பு தெரிவித்து ஆடியோ ஒன்றை அவர் வெளியிட்டார். பின்னர் நவ.23 அன்று, மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
இதையும் படிங்க: "தவறு செய்வது மனிதம்.. மன்னிப்பது தெய்வீகம்" - நடிகை த்ரிஷா ட்வீட்!