சென்னை: இந்த ஆண்டு முடிவடைய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், திரையரங்குகளில் வெளியாகப் பல படங்கள் காத்திருக்கின்றன. அந்த வகையில் நாளை (டிச.15) 7 படங்கள் வெளியாக உள்ளது.
ஆலம்பனா: பாரி கே விஜய் இயக்கத்தில் வைபவ், பார்வதி நாயர், காளி வெங்கட், திண்டுக்கல் லியோனி, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஆலம்பனா. சிறு வயதில் கேட்ட பூதம் கதையை மையமாக வைத்து ஃபேண்டஸி படமாக இது உருவாகியுள்ளது. முனீஷ்காந்த் இதில் பூதமாக நடித்துள்ளார். குழந்தைகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்ணகி: அறிமுக இயக்குநர் யஷ்வந்த் கிஷோர் இயக்கத்தில் கீர்த்தி பாண்டியன், அம்மு அபிராமி, வித்யா பிரதீப், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கண்ணகி. நான்கு பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சிறப்புக் காட்சியைப் பார்த்த பிரபலங்கள் பலரும் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். இப்படம் நாளை (டிச.15) திரையரங்குகளில் வெளியாகிறது.
ஃபைட் கிளப்: இயக்குநர் அப்பாஸ் ஏ ரஹ்மத் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “ஃபைட் கிளப்” (FIGHT CLUB). இந்த படத்தில் விஜய்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆதித்யா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியிடுகிறார். இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் மோதலை பற்றிய படமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
அகோரி: ஆர்.பி.ஃபிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் டி.எஸ். ராஜ்குமார் இயக்கி இருக்கும் படம் 'அகோரி'. ஆக்ஷன், த்ரில்லர், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் கொண்ட இப்படத்தில் அகோரியாக நடிகர் சாயாஜி ஷிண்டே நடித்துள்ளார். சிவனடியாரான அகோரிக்கும், தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் போராட்டமே இப்படத்தின் கதை. தொலைக்காட்சித் தொடர்களின் நாயகன் சித்து அறிமுகமாகும் திரைப்படம் 'அகோரி'.
'பாரதி' படத்தின் மூலம் பாரதியாகவே மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த சாயாஜி ஷிண்டேயின் வித்தியாச நடிப்பிலும் 'அகோரி' என்கிற படம் உருவாகியிருக்கிறது. இவர்களைப் போலவே தங்களது நடிப்பின் மூலம் முந்தைய படங்களின் வழியாகச் சிறந்த நடிப்புக் கலைஞர்களாகத் தடம் பதித்த குணச்சித்திர நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.