சென்னை:கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம் தீபாவளி அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல் வெளியீடும், பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னையில் நேற்று நடைபெற்றது.
ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் முதல் பாடலான 'மாமதுர' பாடலை இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் இணையத்தில் வெளியிட்டார். எஸ் ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்சியில் நடிகர் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா பேசியதாவது, “எல்லைகளைத் தாண்டி ரசிகர்களைச் சென்றடையும் விஷயம் இப்படத்தில் உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படம் எந்த அளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்று நான் பார்த்துள்ளேன்.
லாரன்ஸ் நல்ல மனிதர். இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். கார்த்திக் சுப்பராஜ் படைப்பும், காட்சிகளும் அப்படி இருக்கும். இறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். நான் இங்கு ஒரு நல்ல நடிகனாக இருப்பதற்கு 'இறைவி' படம் மிகப்பெரிய காரணம். அதற்காக கார்த்திக் சுப்பராஜுக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது, “ஜிகர்தண்டா 1 நான் பண்ண வேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள். தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால், அந்தப் படத்தை என்னால் செய்ய முடியவில்லை. நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன். அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்புதான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது, “பேட்ட படத்திற்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நினைக்கிறேன். 'பீட்சா' இசை வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அந்த மாதிரி உணர்வை இப்போது எனக்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' தருகிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தை பற்றி நான் அதிகம் பேச மாட்டேன். இந்தக் கதையை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன்” என தெரிவித்தார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது, “இந்த திரைப்படத்தின் 2023 தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கிறோம். வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் உங்களைச் சந்தித்து 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினோம். நிறைய செலவில் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று நம்புகிறோம். 'ஜிகர்தாண்டா 1' தேசிய விருது வாங்கியதுபோல் 'ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்' படமும் விருது வாங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என கூறினார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது, “கார்த்திக் சுப்பராஜ் உடன் படம் பண்ணும் போது எனக்கு தனி ஸ்பேஸ் கிடைக்கிறது. கார்த்திக் எனக்கு மிகப்பெரிய ஆதரவை அளிப்பவர். நல்ல இசை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் பணியாற்றிய படங்களில் மிகவும் பிடித்தவற்றில் இதற்கு தனி இடம் உண்டு. இந்த படம் வேறு மாதிரி இருக்கும். எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:ஜோஜு ஜார்ஜ் நடிக்கும் ‘ஆண்டனி’ பட டீசர்.. ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு..