தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியானது.. ரசிகர்களுடன் படம் பார்க்கும் ராகவா லாரன்ஸ்! - ஸ்ரீ திவ்யா

Diwali Released Movies: தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த ஜப்பான், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், விக்ரம் பிரபு நடித்த ரெய்டு ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Diwali Released Movies
தீபாவளியை முன்னிட்டு 3 படங்கள் வெளியீடு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 11:19 AM IST

ஜப்பான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வெளியானது

சென்னை: இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்த “ஜப்பான்” திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அனு இம்மானுவேல் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் கார்த்தியின் 25வது திரைப்படம் என்பதால், மிக அதிக பொருட்செலவில் உருவாகி உள்ளது.

மேலும், தெலுங்கு நடிகர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கார்த்தி நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாகவே அமைந்தன. இந்த படமும் அந்தப் பட்டியலில் சேரும் என்பதை ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

இந்த படம் ராஜூமுருகனின் கமர்ஷியல் படமாக இருந்தாலும், அவரது படங்களில் வரும் சமூகம் சார்ந்த விஷயங்கள் படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பில் ஜப்பான் படம் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை காசி திரையரங்கில் கார்த்தி ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்து கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம், “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்”. இந்த படத்தை ஸ்டோன் பென்ஞ்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் நடிப்பில் ஜிகர்தண்டா திரைப்படம் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியைத் தேடி தந்தது. தேசிய விருதுகள் உள்பட பல விருதுகள் இப்படத்திற்கு கிடைத்தன.

இந்நிலையில், 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி உள்ளார், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பேசப்படும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்திய படங்களில், எஸ்.ஜே.சூர்யா நடிப்பு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.

மேலும், அவரது நடிப்பு படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது என ரசிகர்கள் பலரும் கருதுகின்றனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தினை ரசிகர்கள் மேளதாளத்துடன் கொண்டாடி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கில் ராகவா லாரன்ஸ் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை ரசிகர்களுடன் பார்த்து மகிழ்கின்றனர்.

அதேபோல், அறிமுக இயக்குநர் கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உள்ள “ரெய்டு” திரைப்படம் இன்று வெளியாகியது. இந்த ரெய்டு படத்திற்கு இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். ஸ்ரீ திவ்யா மற்றும் புதுமுகம் அனந்திகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 6 வருடங்களுக்குப் பிறகு ஸ்ரீ திவ்யா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"விவாகரத்து என்னை மிகவும் பாதித்தது".. நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்த சமந்தா!

ABOUT THE AUTHOR

...view details