'பொன்னியின் செல்வன்' இசை வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் ஜெயம் ரவி, 'எல்லோரும் நன்றாகப் பேசி விட்டார்கள். நாம் என்ன பேசுவது என்று நினைக்கும் போது, இந்த நேரத்துல வீரர்கள் சொல்லும் வார்த்தை பார்த்துக்கலாம் என்ற கமல் சார் டயலாக் நினைவிற்கு வந்தது.
இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள். எனக்குத் தெரியாது. மணிரத்னம் சார் கூப்பிட்டார். சென்றேன், நடித்தேன் என்று கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்துவிட்டேன் என்று தோன்றியது. ஆனால், நான் சொல்லும்படி அப்படி ஒன்றும் நல்லது செய்யவில்லை. ஒருவேளை அப்பா, அம்மா செய்த நல்ல விஷயங்களால் தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது என்று நினைத்தேன். அதுதான் உண்மை.
பிறகு இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்தேன். உனக்கு கிடைக்கிறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கிறது கிடைக்காது என்ற ரஜினி சார் டயலாக் தான் நினைவிற்கு வந்தது.
மேலும் இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த போது, நான் சினிமாத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளாகிறது. நீண்ட ஆண்டுகளாக உழைத்திருக்கிறேன். அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது என்று தோன்றியது. கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்தப் படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். அதைத் தாண்டி உங்களுடைய ஆதரவும், இறைவனுடைய அருளும் எனக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன். ஏனென்றால், அருண்மொழிவர்மன் யார் என்பதை நான் கூறும்போது, நீ இடையில் எதுவும் சொல்லாமல் அமைதியாக கேள் என்று கூறினார். மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக்கொண்டே வந்தார். அவர் சொல்லி முடித்ததும் ஒரு மூட் உருவானது. அப்படியே வீட்டுக்குச் சென்றேன்.