சென்னை: வழக்கமான பாலாபிஷேகம், டிஜே பாட்டுடன் கூடிய நடனம், பட்டாசு வெடிப்பு, இனிப்பு வழங்குதல் என இருந்த திரைப்படங்களின் ரிலீஸ் கொண்டாட்டம், இன்று திருமணம் வரை சென்றுள்ளது என்றால், திரைப்படக் கொண்டாட்டங்களுக்கு எல்லையே இல்லை என்றுதான் கூற வேண்டும். அதிலும், சர்ச்சைகளைச் சந்தித்து வரும் நடிகர் விஜய்யின் திரைப்பட வெளியீட்டின்போது இப்படியான சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடைபெறுவது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை மட்டுமே ஏற்படுத்துகின்றன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், தனது திரைக்கதைகளின் வாயிலாக பலதரப்பட்ட ரசிகர்களையும் தன்வசப்படுத்தும் இயக்குநர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் ஆகியோரது 2வது கூட்டணியில் உருவாகி, இன்று உலகமெங்கும் வெளியான திரைப்படம், லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்து உள்ளார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி திரை நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து உள்ளனர்.
லோகேஷின் கைதியைத் தொடர்ந்து வெளியான விக்ரம் திரைப்படம், லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற கோட்பாட்டை உருவாக்கியது. எனவே, லியோ படமும் LCU-வில் இணையுமா என ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பைக் கொண்டிருந்தனர். இதற்கு தற்போது பலருக்கும் பதில் கிடைத்து விட்டது என்றே கூறலாம். இந்த நிலையில், ஒரு தமிழ் சினிமா நடிகரின் திரைப்படம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட வெளி நாடுகளில் காலை 4 மணி முதல் வெளியான நிலையில், தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது.
திரையரங்குகளில் பிரபலங்கள்:இவ்வாறு வெளியான காட்சிக்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளில் முன்பதிவு செய்திருந்த ரசிகர்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆகியோர் வெடி வெடித்தும், டிஜே போட்டு நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்த வகையில், திருச்சியில் கறுப்பு நிற உடை அணிந்த நபர்கள் பாடலுக்கு குழுவாக நடனம் ஆடினர். அதிலும், கோவையில் நூற்றுக்கணக்கான தேங்காய்களை விஜய் ரசிகர்கள் சாலையில் உடைத்தனர்.
மேலும், தேனியில் ஓடும் காரின் மீது அமர்ந்தவாறு சிறுவர்கள் நடனமாடினர். இதனிடையே, லியோ படக்குழுவினரான லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள வெற்றி திரையரங்கிற்கு படம் பார்க்க வந்தனர். மேலும், தளபதி 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் வைபவ் ஆகியோர் ஒரு குழுவாகவும், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது குடும்பத்தினர் உடனும், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெவ்வேறு இடங்களிலும் லியோ திரைப்படத்தைப் பார்த்தனர்.