சென்னை:பாலிவுட்டின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் நடிகர்கள் சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு சன்சிட் பல்ஹாரா மற்றும் அன்கிட் பல்ஹாரா சகோதரர்கள் இசையமைத்துள்ளனர்
'ஆதி புருஷ்' இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகி இருக்கிறது. படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் பிரமாண்டமான போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் கதையின் நாயகனான ஸ்ரீ ராமபிரான் பிறந்த புனித இடமாக கருதப்படும் அயோத்தி மாநகரில் உள்ள சரயு நதிக்கரையில், பிரமாண்டமான ஒலி ஒளி அமைப்பு, லேசர் விளக்குகள் மற்றும் வாண வேடிக்கைகளுடன் டீஸரும், போஸ்டரும் வெளியிடப்பட்டது.
நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' படத்தின் போஸ்டர், 50 அடி உயரத்திற்கு தயாரிக்கப்பட்டு, சரயு நதிக்கரையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் நடிகர்கள் பிரபாஸ், கீர்த்தி சனோன், இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்தப்படத்தின் டீஸரில் ராமனாக நடித்திருக்கிறார் நடிகர் பிரபாஸ், மேலும் பனி படர்ந்த பிரதேசத்தில் ராவணனாக நடித்துள்ளார் சயீப் அலி கான். இப்படத்தின் டீஸரில் கிராஃபிக்ஸ் காட்சிகள் தரமற்றதாக உள்ளது எனவும், அனிமேஷன் படம் போல் உள்ளது எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் மூலம் கலாய்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் 'ஆதி புருஷ்' படத்தின் டீஸர் வெளியான குறுகிய காலத்தில் அனைத்து மொழிகளிலும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று ஐமேக்ஸ் மற்றும் 3டி வடிவிலும் உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சொக்க வைக்கும் சோபிதா துலிபாலாவின் நியூ போட்டோ கலெக்ஷன்ஸ்