சென்னை: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் 'லக்கி பாஸ்கர்' படப்பிடிப்பு இன்று (செப்.24) பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கிறது. மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் தேர்ந்த கதைகள் மூலம் தனக்காக ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர்தான், துல்கர் சல்மான்.
இவரது படங்கள் பான் இந்தியா அளவில் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இவரது ‘சீதா ராமம்’ மற்றும் ‘கிங் ஆஃப் கோதா’ ஆகிய படங்கள் வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது. குறிப்பாக, சீதா ராமம் படம் மக்கள் மனதில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது. மேலும், காதல் படமான இது இளைஞர்களையும், ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.
இதன் மூலம், இந்திய சினிமாவில் வெற்றிகரமான பான் இந்திய நடிகராக துல்கர் சல்மான் உள்ளார். இந்த நிலையில், தற்போது அவர் தெலுங்கில் இயக்குநர் வெங்கி அட்லூரியுடன், 'லக்கி பாஸ்கர்' என்ற தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் சூர்யதேவரா நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.