சென்னை:தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான "வாத்தி" திரைப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் தனது 3வது படத்தை நடிகர் தனுஷை வைத்து இயக்கும் வாய்ப்பு பெற்றவர் அருண் மாதேஸ்வரன். இவர் தனது முதல் படமான 'ராக்கி' என்ற படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பின்னர், இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் வெளியான ‘சாணிக்காயிதம் ' திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குநராக வலம் வந்தவர். தற்போது “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் திரைப்படத்தை பிரமாண்டமான முறையில் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தனுஷ் மற்றும் நடிகை பிரியங்கா மோகன் ஆகியோர் இதில் நடிக்கின்றனர். மேலும், இப்படத்தில் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இத்திரைப்படத்தில் ஜான் கொக்கன், நிவேதிதா சதீஷ், குமரவேல், டேனியல் பாலாஜி, மூர், நாசர், விஜி சந்திரசேகர், சுவயம்சிதா தாஸ், பிந்து, அருணோதயன், "மேற்குத்தொடர்ச்சிமலை" ஆண்டனி, பால சரவணன் மற்றும் சில முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இத்திரைப்படம் 1930-40 காலக்கட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்றுத் திரைப்படமாக உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்தது. போர்க்களத்தில் தனுஷ் துப்பாக்கி உடன் நிற்பது போல அவரைச் சுற்றி பிணங்கள் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களால் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இன்று (ஜூலை 28) தனுஷ் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் டீசர் நள்ளிரவு 12.01 மணிக்கு படக்குழு வெளியிட்டது.
இந்த டீசரில் ஆரம்பம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க துப்பாக்கி குண்டுகள் சத்தம் முழங்க காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதுவரை காதல் காட்சிகளில் மட்டுமே நடித்து வந்த பிரியங்கா மோகனின் கையில் துப்பாக்கியை கொடுத்துவிட்டார் இயக்குநர். இத்திரைப்படத்தில் பிரியங்கா மோகன் நடிப்பு வித்தியாசமாக இருக்கும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது.
டீசரில் அறிமுக காட்சியாக தனுஷ் மற்றும் சிவராஜ் குமார் காட்சிகள் மிகவும் பிரபலமாக அமைந்துள்ளது. டீசரை பார்க்கும்போதே மிகப்பெரிய சம்பவம் செய்யப்போகிறார்கள் என்று தெரிகிறது. கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:தமிழ்த் திரைத்துறை குறித்து தவறான தகவல் பரவி வருகிறது: பவன் கல்யாண் கருத்துக்கு நாசர் விளக்கம்!