தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார் - இன்று மாலை தகனம்! - Bonda Mani died

Bonda Mani: தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த நடிகர் போண்டா மணி உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.24) காலமானார். அவருக்கு வயது 60.

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்
போண்டா மணி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 24, 2023, 6:51 AM IST

Updated : Dec 24, 2023, 12:23 PM IST

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

சென்னை: நகைச்சுவை நடிகரான போண்டா மணி, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று (டிச.23) இரவு பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை அவரது உறவினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழரான போண்டா மணி, 1991ஆம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ‘பவுனு பவுனுதான்’ என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சுந்தரா டிராவல்ஸ், மருதமலை, வின்னர், ஏய், வசீகரா, ஜில்லா உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களில், சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். குறிப்பாக, நடிகர் வடிவேலு உடன் இணைந்து இவர் நடித்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

சென்னை பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் நடிப்பு தவிர்த்து, அரசியல் மேடை பேச்சாளராகவும், கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வந்துள்ளார். கடந்த ஆண்டு சிறுநீரக பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். குடும்பச் சூழல் காரணமாக தனக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்திலும், படங்களில் நடித்தும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் வந்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று வீட்டில் திடீரென மயங்கி விழுந்த போண்டா மணி உயிரிழந்துள்ளார். இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்த நிலையில் அவர் உயிர் பிரிந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போண்டா மணியின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மறைந்த நடிகர் போண்டா மணியின் உடல் இன்று மாலை 4 மணியளவில், அவரது இல்லத்தில் இருந்து இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, பல்லாவரம் பொழிச்சலூரில் இருந்து ஊர்வலமாக எடுக்கப்பட்டு, மாலை 5 மணியளவில் குரோம்பேட்டை மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:வானிலை மைய விமர்சனங்கள்: இந்தியத் தொழில்நுட்பத்தை இழிவுபடுத்தும் விதமாகவும் உள்ளது - சென்னை வானிலை மையம்

Last Updated : Dec 24, 2023, 12:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details