சென்னை: இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. இப்படத்தில் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு, ஒரு ஆண்டுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.
இந்த படத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகாவின் நடிப்பு மிகவும் பேசப்பட்டது. இது ஒரு ரீமேக் படமாக இருந்தாலும், மற்ற மொழிகளில் இல்லாத வகையில் ரஜினிக்காக பல காட்சிகள் சேர்க்கப்பட்டன. காமெடிக்காக வடிவேலு பகுதி இணைக்கப்பட்டது. வடிவேலுவின் காமெடியும் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய அளவில் உதவியது. ரஜினியின் ஆக்ஷனும், வித்யாசாகரின் பாடல்களும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தன.
இந்த நிலையில், இயக்குநர் பி.வாசு தனது 65வது படமாக 'சந்திரமுகி 2' என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே , சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லர் வித் ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படம் வரும் 15ஆம் தேதி தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருந்தது. அதற்கான புரோமோசன் பணிகளும், இறுதிகட்டப் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில், VFX பணிகள் நிறைவடையாததால் படம் செப்டம்பர் 28ஆம் தேதிக்கு தள்ளிப்போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் செப்டம்பர் 15இல் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படம் தனியாக வெளியாகும் என எதிர்பார்த்த நேரத்தில், இன்று வெளியாகவிருந்த மணிபாரதியின் பரிவர்த்தனை திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு தள்ளிப்போனது. அதனால் செப்டம்பர் 15இல் மார்க் ஆண்டனியும், பரிவர்த்தனையும் மோதிக் கொள்கின்றன.
இதையும் படிங்க:Jailer Actress Mirnaa Menon: காந்த கண்ணழகி மிர்னா மேனனின் கண் கவரும் க்ளிக்ஸ்..