சென்னை:இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை கட்டிப்போடும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 விரைவில் தொடங்கவுள்ளது. இந்த சீசனையும் பிக் பாஸ் தமிழின் ஆஸ்தான தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். பிக்பாஸ் சீசன் 7க்கான முதல் ப்ரோமோ சமீபத்தில் வெளியானது.
வெளியுலக தொடர்பு இல்லாமல், எந்தவித தொழில்நுட்ப வசதி இல்லாமல், பழக்கம் இல்லாத நபர்களுடன் 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்க வேண்டும் என்பதே பிக்பாஸ் விளையாட்டு. பிக்பாஸ் வீட்டில் தங்கும் நபர்களுக்குள் ஏற்படும் நட்பு, காதல், சண்டை உள்ளிட்ட உணர்வுகளை பல்வேறு கேமராக்கள் படம்பிடித்து காட்டும்.
இந்த பிக்பாஸ் விளையாட்டு வெளிநாடுகளில் அறிமுகமானது. பின்னர் இந்தியாவில் இந்தி தொலைக்காட்சிகளில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்க வேறு பரிமாணத்தில் விளையாடப்பட்டது. பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் அந்தந்த மாநிலங்களில் பிரபல நடிகர்கள் தொகுத்து வழங்க பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
தமிழில் முதல் சீசன் ஆரம்பம் முதல் நடிகர் கமல்ஹாசன் தொகுப்பாளராக இருந்து வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பம் முதல் தமிழ்நாடு மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு நடிகர் கமல்ஹாசனின் தனித்துவமான ஆங்கரிங் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. போட்டியாளர்களின் நல்ல செயல்களையும், தவறுகளையும் நேர்த்தியாக கமல்ஹாசனுக்கே உரித்தான பாணியில் சுட்டிக்காட்டுவது நிகழ்ச்சியை மக்களுக்கு மேலும் சுவாரஸ்யத்தை கூட்டியது.
மேலும் இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் எளிதாக மக்களிடையே பிரபலமடைகின்றனர். அவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு வாய்ப்பாகவும், திரையுலகில் நுழைய ஒரு வாய்ப்பாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் முதல் சீசனில் நடிகர் ஆரவ் வென்றார்.
இரண்டாவது சீசனில் மெட்ராஸ் பட நடிகை ரித்திகா வென்றார். மூன்றாவது சீசனில் முகேன் ராவும், நான்காவது சீசனில் ஆரியும் ஐந்தாவது சீசனில் ராஜுவும் வெற்றி பெற்றனர். கடந்த 6வது சீசனில் அசீம் வெற்றி பெற்ற நிலையில் 7வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவில் இரண்டு கமல்ஹாசன் தோன்றும் நிலையில் இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடு என கூறப்படுகிறது.
இதையும் படிங்க:Jawan booking: 15 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த ஜவான் டிக்கெட்டுகள்!