சென்னை: இது தொடர்பாக இயக்குநர் அமீர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில், “வணக்கம், திக்கெட்டும் திகழ் ஒளி வீசி தமிழ்நாட்டின் பெருமையை உலகறியச் செய்து வரும் தாங்கள், தமிழின் தலைநகராம் மதுரையில் ஜல்லிக்கட்டுக்கென சிறப்பாக “கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்” என்ற மைதானம் ஒன்றை தங்கள் திருக்கரங்களில் திறக்கவிருக்கும் இவ்வேளையில்,
“தொழுவினுள் புரிபு புரிபு புக்க பொதுவரைத் தெரிபு தெரிபு குத்தின ஏறு.. கொல்லேற்றுக் கோடஞ்சு வானை, மறுமையும் புல்லாளே ஆய மகள்..” என்று கலித்தொகை பறைசாற்றும் பாரம்பரியமும், வீரமும் ஒருங்கே அமையப் பெற்று, மத்திய அரசிடமும், உச்ச நீதிமன்றத்திடமும் போராடிப் பெற்ற நமது கலாசார வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, தமிழ்நாடு அரசின் அரசுப் பணி இடஒதுக்கீட்டில் விளையாட்டு உட்பிரிவில் சேர்த்து மேலும் பெருமை சேர்க்க கோருகிறேன்.