சென்னை: நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், கடந்த 2023 டிசம்பர் 28ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அதனைத் தொடர்ந்து, கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தமிழ்நாடு மொத்தமும் சோகத்தில் மூழ்கியது. மேலும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஏராளமான திரைப் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், விஜயகாந்த் மறைவின்போது நடிகர் விஷால் வெளிநாட்டில் இருந்ததால், இன்று (ஜன.9) நடிகர் ஆர்யாவுடன் விஜயகாந்த் நினைவிடம் வந்த விஷால், மலர் வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விஷால், "நடிகர் விஜயகாந்த் மீட்ட நடிகர் சங்கத்தில் நான் பொதுச் செயலாளராக இருப்பது பெருமையாக உள்ளது. மறைந்த பிறகு அனைவரையும் சாமி எனக் கூறுவார்கள், ஆனால் விஜயகாந்த் நன்மைகள் செய்து உயிருடன் இருக்கும் போதே அனைவராலும் சாமி என போற்றப்பட்டவர்.
மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த், தமிழ் திரையுலகில் மிகப்பெரிய நடிகர், நல்ல தைரியமான அரசியல்வாதி. படப்படிப்புத் தளத்தில் எல்லோரையும் சமமாக பார்ப்பவர் விஜயகாந்த். அவரது மறைவிற்கு என்னால் வர முடியவில்லை. நான் அவரின் கடைசி நேரத்தில் இருந்திருக்க வேண்டும். இல்லாததற்கு அவரின் நினைவிடத்தில் மன்னிப்பு கேட்டேன்.