சென்னை:நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம், இதுவரை ரூ.80 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார். தமிழில் இப்படத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய வரவேற்பை அடுத்து, இப்படம் இன்று இந்தியில் வெளியாகியுள்ளது.
இதன்படி, இன்று காலை முதல் இந்தியில் இப்படம் வெளியாகி ஓடி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தை இந்தியில் வெளியிட மும்பை சென்சார் போர்டு லஞ்சம் கேட்டுள்ளதாக நடிகர் விஷால் பரபரப்பு புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சினிமாவில்தான் நான் ஊழலை பார்த்துள்ளேன். நிஜத்தில் நடந்துள்ளது. இதனை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
அதுவும் அரசு அலுவலகத்தில், மும்பை சென்சார் போர்டு அலுவலகத்தில் மார்க் ஆண்டனி இந்தி பதிப்பை வெளியிட ரூ.6.5 லட்சம் கேட்கின்றனர். 3 லட்சம் படத்தை திரையிடவும் 3.5 லட்சம் சான்றிதழ் வழங்கவும் கேட்கின்றனர். எனது திரை வாழ்வில் இது போன்ற ஒன்றை நான் எதிர்கொண்டதில்லை. எங்களுக்கு வேறு வழியில்லை. ஏராளமானோருக்கு பங்கு செல்கிறது. இந்த விஷயத்தை பிரதமர் மோடியின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளேன்.