சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாராவின் 75வது படமாக வெளியான திரைப்படம், அன்னபூரணி. நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான அன்னபூரணி படத்தில், நயன்தாரா உடன் நடிகர் ஜெய், கே.எஸ்.ரவிக்குமார், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இப்படத்தில் இடம் பெற்ற சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அன்னபூரணி திரைப்படத்தின் கதையானது, பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணான அன்னபூரணி (நயன்தாரா) மிகப்பெரிய செஃப் (Chef) ஆக வேண்டும் என்ற ஆசையில், வீட்டை விட்டு வெளியேறி தனது லட்சியத்தை அடையப் போராடுவார். அதன் தொடர்ச்சியாக, ஒரு ஹோட்டல் மேனேஜ்மண்ட் கல்லூரியில் சேர்ந்து, தனது ஆசைப் பயணத்தைத் துவங்குவார்.
அந்த பயணத்தில் அவர் வெற்றி அடைந்தாரா, இல்லையா என்பதுதான் மீதிக்கதை. இப்படத்தில் பிராமண குடும்பத்தில் பிறந்த அன்னபூரணி, அசைவ உணவுகளைச் சமைப்பது மற்றும் சாப்பிடும் காட்சிகள் இடம் பெற்றிருந்ததை அடுத்து, அன்னபூரணி திரைப்படம் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக கதையம்சம் கொண்டுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பியது.
குறிப்பாக, இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு காட்சியில், நயன்தாராவை இறைச்சியை சமைக்க வைக்க வேண்டும் என்பதற்காக, ராமர் கூட இறைச்சி சாப்பிடுவார் என்று நாயகன் ஃபர்ஹான் (ஜெய்) கூறுவார். இந்த காட்சிக்கு கடும் சர்ச்சைகள் கிளம்பின. மேலும், இந்து அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.