அம்பேத்கரையும், பிரதமர் நரேந்திர மோடியையும் ஒப்பிட்டு 'அம்பேத்கர் அண்ட் மோடி' என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
இதற்கு, அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தும் வரும் நிலையில், இளையராஜாவின் மகனும், பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
யுவன், கடற்கரையில் கருப்பு டீ-சர்ட், லுங்கி அணிந்துகொண்டு நிற்கும் புகைப்படத்துடன் "கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன்" என பதிவிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் இளையராஜா விவகாரம் அனல் பறந்துகொண்டிருக்கும் சூழலில், தன்னை திராவிடன், தமிழன் என அடையாளமிட்டு பதிவிட்டுள்ளது நெட்டிசன்களுக்கு பெரும் தீனியாகியுள்ளது.
இதேபோன்று, இந்தி திணிப்பு விவகாரம் டிரெண்டாகி கொண்டிருந்த நேரத்தில், "நான் தமிழ் பேசும் இந்தியன்" என்ற வாசகத்துடன் டீ-சர்ட் அணிந்தவாறு புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதுவும் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் டிரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "மோடியை பார்த்து அம்பேத்கர் பெருமைப்படுவார்..!"- இளையராஜா கூறிய காரணம் என்ன?