சென்னை: மலையாள திரையுலகில் முன்னணி இயக்குநர் ரெஜிஷ் மிதிலா, "யானை முகத்தான்" படம் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் யோகிபாபு நாயகனாக நடிக்கிறார். ரெஜிஷ் மிதிலா எழுதி, இயக்கி, தயாரிக்கும் இத்திரைப்படம் முழுக்க, முழுக்க ஃபேன்டஸி திரைப்படமாக உருவாகி வருகிறது.
'யானை முகத்தான்' இப்படத்தில், கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். அதே கணேஷ் கதாபாத்திரத்தில் ஆட்டோ டிரைவராக ரமேஷ் திலக் நடிக்கிறார். இவர் விநாயகர் மீது மிகுந்த நம்பிக்கை கொண்ட தீவிர பக்தர். ஏறக்குறைய தான் சந்திக்கும் அனைத்து நபர்களிடமும் கடன் வாங்கிவிடுவார். பிறகு, வாங்கிய கடனைத் திருப்பி கொடுக்க முடியாமல் திணறுவார்.
இவரிடம், யோகிபாபு தன்னை விநாயகர் என்று அறிமுகப்படுத்திக்கொள்கிறார். அத்துடன் ரமேஷ் திலக்கிடம் ஒரு நிபந்தனையை முன்வைக்கிறார். இப்படி லூட்டி அடிக்கும் இவர்களைச்சுற்றி நடக்கும் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படுகிறது. இதை சுவாரசியமாக ரெஜிஷ் மிதிலா இயக்கியுள்ளார்.