சென்னை: சர்வதேச மகளிர் தினம் நாளை(மார்ச்.8) கொண்டாடப்படுகிறது. பாலின சமத்துவம், பெண்ணுரிமை உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. தற்போது பல்வேறு துறைகளில் பெண்களின் முன்னேற்றம் குறிப்பிடத்தகுந்த அளவில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், திரைத்துறையில் அண்மைக்காலமாக கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்படும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்...
நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமா வரலாற்றில் கதாநாயகனை மையப்படுத்திய படங்களே நிறைய எடுக்கப்பட்டு வந்தன, ஆதிக்கமும் செலுத்தின. கேமராவுக்குப் பின்னால் நிறைய பெண் கலைஞர்கள் பணியாற்றி இருந்தாலும், திரையில் கதாநாயகியை மையப்படுத்திய படங்கள் அரிதாகவே வந்தன. கடந்த சில தசாப்தங்களுக்கு முன்பு கே.பாலச்சந்தர் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி படங்களை இயக்கியிருந்தார்.
'அவள் ஒரு தொடர்கதை' உள்ளிட்ட படங்களில் பெண்களின் பிரச்னைகளைப் பேசினார். அதனைத்தொடர்ந்து பாலு மகேந்திரா, பாரதிராஜா உள்ளிட்ட இயக்குநர்களும் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்தி சில படங்களை இயக்கியிருந்தனர். ஆனால், இதுபோன்ற படங்கள் வணிக ரீதியில் வெற்றிபெறவில்லை. எனவே, தயாரிப்பாளர்களும் இத்தகைய படங்களை தயாரிப்பதில் முனைப்பு காட்டவில்லை.
இந்தச் சூழலில், அண்மைக்காலமாக கதாநாயகியை மையப்படுத்திய படங்கள் எடுப்பது மீண்டும் அதிகரித்துள்ளது. சில படங்கள் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இணையாக வசூலை கொடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 80களில் விஜயசாந்தி போன்றோரின் படங்கள் வந்திருந்தாலும், சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய படங்களுக்கு அடித்தளம் அமைத்தவர், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. நயன்தாராவை நாயகியாக போட்டு படங்கள் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வந்தனர்.
கோலமாவு கோகிலா, மாயா, இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தின. முன்னதாக அனுஷ்கா நடித்த அருந்ததி பிரமாண்ட ஹிட்டடித்தது. அதனைத்தொடர்ந்து அனுஷ்காவின் தனி ஹீரோயின் படங்கள் சில வெளிவந்தன. குறிப்பாக ருத்ரம்மா தேவி, பாகமதி, இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட படங்கள் வெளிவந்தன. நயன்தாராவின் கோலமாவு கோகிலா வெற்றிக்குப் பிறகு அறம், ஐரா, ஓ2, புதிய நியமம் என தொடர்ந்து படங்கள் வெளியாகின.
நயன்தாராவைத் தொடர்ந்து பிற நடிகைகளும் இதுபோன்ற நாயகியை மையப்படுத்திய படங்களை கொடுக்கத் தொடங்கினர். குறிப்பாக கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், சமந்தா, அமலா பால், சாய் பல்லவி என முன்னணி நடிகைகள் அனைவருமே பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய படங்களில் நடிக்கத் தொடங்கினர். அதேபோல், திருமணமாகி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய படங்களில் நடித்தார். 36 வயதினிலே, மகளிர் மட்டும், காற்றின் மொழி, ஜாக்பாட் உள்ளிட்ட படங்களில் நடித்தார். ஜோதிகா பல ஆண்டுகளுக்கு முன்பே, சிநேகிதியே என்ற முழுக்க முழுக்க பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய படத்தில் நடித்திருந்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தெலுங்கில் மகாநடி என்ற படத்தில் நடித்தார். பழம்பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட அப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு பென்குவின் என்ற படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். கீர்த்தி சுரேஷை தொடர்ந்து சமந்தாவும் யு டர்ன், யசோதா உள்ளிட்டப் படங்களில் நடித்தார். சாய் பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு கார்கி என்ற அட்டகாசமான திரைப்படம் வெளியானது.
கமர்ஷியல் படங்களில் நாயகிகளுக்கு டூயட் பாடுவது, சில காட்சிகளில் வந்துபோவது மட்டுமே வேலையாக இருக்கும். இதுவே கதாநாயகியை மையப்படுத்திய படங்களில் அவர்களது முழுத் திறமையும் வெளிப்படுத்த நல்ல தளமாக இத்தகைய படங்கள் அமைகின்றன. எனவே, முன்னணி நாயகிகள் பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இத்தகைய படங்கள் வசூல் அள்ளுவதாலும், தயாரிப்பாளர்களும் தற்போது இதுபோன்ற படங்களுக்கு முன்னுரிமை தருகின்றனர். த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் ராங்கி படம் வெளியானது. கர்ஜனை என்றொரு படமும் அவரிடம் உள்ளது.
அமலா பால் 'ஆடை' என்ற படத்தில் நடித்தார். அவருடைய கடாவர் என்ற படம் ஓடிடியில் வெளியானது. ஆண்ட்ரியா கைவசம் 'கா' என்ற படம் உள்ளது. இப்படி எல்லா நடிகைகளும் தங்களை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இது தமிழ் சினிமாவின் அடுத்த அத்தியாயமாக பார்க்கப்படுகிறது. நயன்தாரா திருமணம் ஆன பிறகு நடிப்பில் கொஞ்சம் இடைவெளி விட்ட நிலையில், அந்த இடத்தை பிடித்துக்கொண்டு தற்போது அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை நோக்கி ஐஸ்வர்யா ராஜேஷ் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
நயன்தாராவுக்குப் பிறகு, அதிகமான ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளில் நடித்து வருபவர், இவர்தான். தொடர்ச்சியாக இவருக்கு படங்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. கனா தொடங்கி அடுத்து வெளியாகவுள்ள சொப்பன சுந்தரி வரை கைவசம் ஏகப்பட்ட பெண் கதாபாத்திரங்களை மையப்படுத்திய படங்களை வைத்துள்ளார். காக்கா முட்டை, க/பெ ரணசிங்கம், டிரைவர் ஜமுனா, கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, பூமிகா, பர்ஹானா, திட்டம் இரண்டு என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
முன் எப்போதும் இல்லாத அளவில் தற்போது கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகின்றன. இது வருங்கால தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. வெறும் இரண்டு பாட்டு, நான்கு காட்சிகளுக்கு வந்து செல்வது போன்ற படங்களில் நடிப்பதை விட இத்தகைய நாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்தால் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பாக இருப்பதால் நடிகைகளும் இத்தகைய படங்களுக்கு முன்னுரிமை தருகின்றனர். நடிப்பு, ஆக்சன், காமெடி என அனைத்து பரிமாணத்திலும் ஜொலிக்க முடியும் என்பதும், இதுபோன்ற படங்களின் எண்ணிக்கை அதிகமாக வருவதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இத்தனை காலமாக நாயகனை மட்டுமே திரையில் பார்த்து விசில் அடித்து கைதட்டி ரசித்த ரசிகர்கள் இப்போது நாயகிகளின் அறிமுக காட்சிக்கும் கைதட்டி, விசில் அடிக்கின்றனர். நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களை முதல்நாள் திரையரங்குகளில் சென்று பார்க்கின்றனர். குடும்பங்களும் சென்று பார்க்கின்றனர். இது தமிழ் சினிமாவுக்கு புதுசு. இந்த மாற்றங்கள்தான் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கின்றன என்பதில் ஐயமில்லை.
இதையும் படிங்க: ஆர்ஜே பாலாஜியின் “ரன் பேபி ரன்” ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!