சென்னை:இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படம் நேற்று (ஜூன்29) திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக மாமன்னன் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. சேலத்தில் நடக்கும் ஒரு அரசியல் கதையாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. காசிபுரம் தனித் தொகுதியில் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர் ஃபகத் ஃபாசிலுக்கும், அதே கட்சியின் எம்எல்ஏ வடிவேலு மற்றும் அவரது மகனான உதயநிதிக்கும் இடையே நடக்கும் மோதல்தான் படம்.
இதில் வடிவேலுவின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருப்பதாகவும், பகத் பாசில், உதயநிதி, கீர்த்தி ஆகியோரின் நடிப்பு சிறப்பாக இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். அதிலும், ஆதிக்க சாதியினரின் அடக்கி ஆளும் குணத்தை கேள்வி கேட்டுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ் என்றும் பதிவிட்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, முன்னாள் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் தனபாலின் கதைதான் இது என்கின்றனர் சிலர். தனபால் அதிமுக ஆட்சியின்போது சபாநாயகராக இருந்தவர். பட்டியலின சபாநாயகர் இவர். இவரது கதாபாத்திரத்தில்தான் வடிவேலு நடித்துள்ளார். ஆனால், கதை வேறு மாதிரி எடுக்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை இரு முறை சட்டப்பேரவை சபாநாயகராக தனபால் இருந்துள்ளார். 2001இல் உணவு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். சேலம் பகுதியை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. 2001ஆம் ஆண்டு அதிமுக சார்பாக சங்ககிரி தொகுதியில் தனபால் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.
அப்போது தேர்தல் பணியாற்றும் கட்சியினருக்கு சாப்பாடு கூட தனபால் வாங்கித் தருவதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரிய வர, தனபால் போயஸ் கார்டனுக்கு அழைக்கப்பட்டார். இதனையடுத்து, கட்சியினருக்கு சாப்பாடு கூட வாங்கித் தருவதில்லை என தனபாலிடம் ஜெயலலிதா கேட்டபோது, "நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். நான் சாப்பாடு வாங்கிக் கொடுத்தாலும் அதிமுகவினர் யாரும் வாங்க மாட்டார்கள். வாங்கிக் கொடுத்த சாப்பாட்டையும் தொடக்கூட இல்லை" என கூறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, 2001ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, தனபாலை உணவுத்துறை அமைச்சர் ஆக்கினார். "நீங்கள் வாங்கி கொடுக்கும் சாப்பாட்டை தொடக் கூட மாட்டார்கள் என கூறினீர்கள். ஆனால், இன்று நீங்கள்தான் தமிழ்நாட்டுக்கு உணவு தரப் போகிறீர்கள்" என ஜெயலலிதா கூறியதாக தனபால் ஒரு இடத்தில் பதிவு செய்திருப்பார்.