அமரர் கல்கி எழுதிய நாவலின் பெயர் ராஜராஜசோழனை குறிப்பிடும் வகையில் பொன்னியின் செல்வன் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கதையின் போக்குப்படி பார்த்தால் வந்தியத்தேவன்தான் இந்த நாவலின் கதாநாயகன் என்று கூட வர்ணிக்கலாம். ஆதித்த கரிகாலனிடமிருந்து தஞ்சை நோக்கி புறப்படும் வந்தியத்தேவனின் பயணமே, பொன்னியின் செல்வன் கதையின் தொடக்கம்.
வந்தியத்தேவன் உண்மை கதாபாத்திரமா?: ஒவ்வொரு கதாபாத்திரங்களின் அறிமுகத்தைக் கூட வந்தியத்தேவனின் பார்வையில் தான் அணுகியிருப்பார் கல்கி. சோழர் வம்சத்தின் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலனின் நண்பன், சோழ இளவரசி குந்தவையின் காதலன், ராஜராஜ சோழன் என்றழைக்கப்படும் அருள்மொழி வர்மனின் உயிர்த்தோழன் என பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
வந்தியத் தேவன் கதாபாத்திரம் குறித்து இத்திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் கார்த்தி பேசும் போது, ஆட்சி அதிகாரமற்ற ஒரு இளவரசனைப் போன்ற கதாப்பாத்திரம் என பொருள் படும்படியாக விளக்கியிருந்தார். ஆனால் வரலாற்று ரீதியாக வந்தியத்தேவன் என்ற கதாபாத்திரத்திற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்பது தான் சுவாரஸ்யம்.
டி.வி.சதாசிவ பண்டாரத்தார் எழுதிய பிற்கால சோழர் சரித்திரம் புத்தகத்தில், கீழை சாளுக்கிய மரபைச்சேர்ந்தவராக இருக்கக் கூடும் என வந்தியத்தேவனை பற்றி எழுதுகிறார். ஆனால் இதிலிருந்து கல்கி முரண்பட்டுள்ளார். வல்லத்து வாணர் குல இளவரசனாக இருக்கலாம் என்ற பார்வையிலேயே அவரது பாத்திரத்தை கட்டமைத்திருக்கிறார்.