சென்னை: கண்ணன் ரவி குரூப் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஷாந்தனு நடிக்கும் "இராவண கோட்டம்" திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது.
கண்ணன் ரவி தயாரிப்பில், இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், ஷாந்தனு நடிப்பில் மண் சார்ந்த மாறுபட்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "இராவண கோட்டம்". இப்படம் மே 12ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
இந்நிலையில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சாந்தனு, ஆனந்தி, விக்ரம் சுகுமாரன், இளவரசு, இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து நடிகை கயல் ஆனந்தி பேசியதாவது, '' 3 வருட உழைப்பு. பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் இப்போது வெளியாகத் தயாராகி உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. யாரும் விட்டுக்கொடுக்காமல் இந்தப் படத்திற்கு உழைத்துள்ளோம். விக்ரம் சுகுமாரன் சினிமாவை மிகவும் ரசித்து வேலை செய்பவர். அவருடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஷாந்தனு உடன் இணைந்து நடித்தது மிகவும் சுலபமாக இருந்தது. இந்தப் படம் ராம்நாடு மக்களின் வாழ்க்கை பற்றிப் பேசுவதாக இருக்கும். படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தை அனைவரும் தியேட்டரில் வந்து பார்க்க வேண்டும் நன்றி'' எனக்கூறினார்.
நடிகர் ஷாந்தனு பேசியதாவது, ''இப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணன் என் தந்தை எனக்கு என்ன செய்ய வேண்டும் என நினைப்பாரோ அதே போல் நான் முன்னேறத் தேவையான அனைத்தையும் செய்தார். அவருக்கு மிகப்பெரும் நன்றி. இந்தப்படம் சக்கரக்கட்டி படத்திற்குப் பிறகு மக்களிடம் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படமாக இருப்பது மிக மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப் படத்தில் நடிகரைத் தாண்டி, தயாரிப்புப் பணிகளும் நான் பார்க்க வேண்டி இருந்தது, தயாரிப்பு மிகக் கடினமான வேலை. மிகவும் சிரமப்பட்டேன், படக்குழுவிற்கு நிறைய அனுபவம் இருந்தது, அனைவரும் இப்படத்திற்காகப் பல நாட்கள் தூங்காமல் வேலை செய்தனர். அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நான்கு வருடங்கள் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். படம் பார்த்த பிறகு எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. கிராமத்துப் பையனாக நடிக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல, காலில் இரத்தம் வர நடித்தேன். எந்தப் படத்திலும் நான் இதைச் செய்ததில்லை. நான் மட்டும் இல்லை அனைவரும் இது போல கஷ்டப்பட்டுத் தான் நடித்தனர். இந்தப் படத்தில் தென் மாவட்டத்தில் உள்ள அரசியலைப் பற்றிப் பேசியுள்ளனர். இது ஒரு தரமான படைப்பாக இருக்கும். அனைவரும் எங்கள் உழைப்பிற்கு ஆதரவு தர வேண்டும் நன்றி.
குழந்தையைப் பெற்றெடுத்த வலியை எனக்கு கொடுத்துவிட்டனர். தயாரிப்புப் பணிகளையும் நானே செய்ததால் மனிதர்கள் யார், பணம் யார் எனக் கற்றுக்கொடுத்தது இந்தப் படம் தான். சின்ன சின்ன விஷயம் காரணமாக படத்தின் பட்ஜெட் அதிகமாகிவிட்டது. படப்பிடிப்பு தளத்தில் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்தேன். எதற்கெடுத்தாலும் பில் தான். 17, 18ஆம் நாள்தான் எனக்கே தெரிந்தது. படப்பிடிப்பு சமயத்தில் இரவோடு இரவாக மரக்கிளையை வெட்டி விட்டார்கள். இதனால் இரு சமுதாயத்தினர் இடையே பிரச்னை ஏற்பட இருந்தது.
ஜூனியர் நடிகர்களை வர விடமாட்டார்கள். எல்லாவற்றிற்கும் பணம் தான். ஒருகட்டத்தில் மறைவாகச் சென்று தேம்பி தேம்பி அழுதேன்.