சென்னை: பனையூரில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரைத்துறை பயணத்தின் 30வது ஆண்டை கொண்டாடும் வகையில் 'மறக்குமா நெஞ்சம்' என்ற பெயரில், நேரலை இசை நிகழ்ச்சி (Live In Concert) கடந்த செப்.10ஆம் தேதி மாலை 7 மணிக்கு துவங்கி 11 மணி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதற்காக அரங்கு அமைக்கப்பட்டு சில்வர், கோல்டு, பிளாட்டினம், என்று பல்வேறு படிநிலை விலையில் பிரத்யேக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
ஆனால் அரங்கினுள் கூட்டம் அலை மோதியதாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட் வைத்திருந்தவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். இதனால் அவர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியுள்ளோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டு, ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இந்த கூட்டத்தில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும் கூறுகின்றனர்.
மேலும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அந்த இடமே போராட்டக் களமாக காட்சியளித்தது. தற்போது இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் ஏ.ஆர்.ரகுமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஹேமந்த் வீடியோ மூலம் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். அதில், "ஏஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்த அத்தனை ரசிகர்களுக்கும் எனது முதல் நன்றி. நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்துக் கொடுத்த ஏஆர் ரகுமானுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.