சென்னை:தமிழ் சினிமாவில் வரலாற்று படங்கள் அதிக அளவில் எடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பக் காலங்களில் வரலாறு படங்களே தமிழில் அதிகம் எடுக்கப்பட்டன. அதன் பிறகு தமிழ் சினிமா வேறு வழியில் பயணிக்கத் தொடங்கியது. தற்போது மீண்டும் வரலாற்றுப் படங்களின் பக்கம் தமிழ் இயக்குநர்கள் பார்வை திரும்பி உள்ளது. அதற்கு முதல் காரணமாகப் பொன்னியின் செல்வன் படத்தைச் சொல்லலாம்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இதன் முதல் பாகம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இரண்டாம் பாகம் இம்மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில் யாத்திசை என்ற வரலாற்று திரைப்படம் வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி 60 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. ஒரு புதுமுகங்களின் திரைப்படத்தின் ட்ரெய்லர் இத்தனை பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது ஆச்சரியம் தான்.
வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள யாத்திசை திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் தரணி இராசேந்திரன், பாண்டியன் ஸ்டோர், பாக்கியலட்சுமி தயாரிப்பாளர் கே ஜே கணேஷ், நடிகை சுபத்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.