சென்னை: இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக "வதந்தி - தி ஃபேபிள் ஆஃப் வெலோனி" என்ற வெப் சீரிசில் நடித்துள்ளார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இந்த வெப் சீரிசை, வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றனர். இதில் வேலோனி என்ற கதாப்பாத்திரத்தில் நடிக்கும் சஞ்சனா, இந்த தொடரின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாகியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். லைலா, எம். நாசர், விவேக் பிரசன்னா, குமரன், ஸ்ம்ருதி வெங்கட் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அமேசான் ஒரிஜினல் வெப் சீரிசாக உருவாகியுள்ள இது, டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகிறது.
"வெப்சீரிஸ் பார்ப்பது சுற்றுலா போன்றது": புஷ்கர்-காயத்ரி
வெப்தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது என "வதந்தி" வெப் சீரிஸ் தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தயாரிப்பாளர்கள் புஷ்கர்- காயத்ரி கூறும்போது, "வெப் தொடரைப் பார்ப்பது ஒரு வகையான சுற்றுலா போன்றது. மக்கள் எப்படிப் பயணம் செய்கிறார்கள்? அல்லது ஆன்லைனில் படங்களைத் தேடுகிறார்கள்? என்பதைப் போன்றது. கடந்த 2-3 ஆண்டுகளில், தெற்கில் இருந்து பல கதைகள் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பயணித்து வருகிறது. இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய பகுதிகளில் இருந்து வரும் 'வதந்தி' போன்ற கதைகள், அத்தகைய தனித்துவத்தை கொண்டுள்ளன. அது தான் எங்களை ஆக்கப்பூர்வமான பல கதைகளை மீண்டும் மீண்டும் வழங்க தூண்டுகிறது. பிரைம் வீடியோவுடன், எங்களது இந்த கதையை மிகப்பரந்த அளவிலான பார்வையாளர்களை சென்றடையவிருக்கிறது. இந்த தொடர் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கும் மேல் திரையிடப்பட உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'வதந்தி' வெப் சீரிஸில் அறிமுகமாகும் நடிகை சஞ்சனா!