சென்னை: நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா, உள்ளிட்ட பலர் நடித்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறைக்கு வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். டைம் ட்ராவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட மார்க் ஆண்டனி ரசிகர்களிடம் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் வித்தியாசமான நடிப்பை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக படத்தின் இடைவேளை காட்சி, கிளைமாக்ஸ் காட்சிகளில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்புக்கு திரையரங்குகளில் விசில் பறந்தது. மேலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கடைசியாக இயக்கிய ’அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ எதிர்பார்த்த அளவு ஓடாததால் மார்க் ஆண்டனி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு குறைவாக இருந்தது.
ஆனால் மார்க் ஆண்டனி திரைப்பட வெற்றி ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நல்ல கம்பேக்காக அமைந்துள்ளது. மேலும் நடிகர் விஷால் நடித்த படங்களில் மார்க் ஆண்டனி அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது. ஏற்கனவே தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், இன்று இந்தியில் வெளியாகிறது என நடிகர் விஷால் தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.