சென்னை: தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குநரான கௌதம் மேனன் இயக்கும் காதல் படமாகட்டும், ஆக்ஷன் படமாகட்டும் பார்ப்பதற்கு அழகாகவும் ரசிக்கத்தக்க வகையிலும் இருக்கும். இவரது படங்களில் காதல் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். குறிப்பாக விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் வரும் காதல் காட்சிகள் அனைத்தும் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால் போன்ற ஆக்ஷன் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றவை. இவர் சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஏராளமான படங்களில் நடித்து வரும் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படத்திலும் நடித்துள்ளார்.
இவரது இயக்கத்தில் கடைசியாக சிம்பு நடித்த “வெந்து தணிந்தது காடு” படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் நடிகர் விக்ரம், கௌதம் மேனன் முதல் முறையாக கூட்டணி அமைத்த படம் 'துருவ நட்சத்திரம்' (Dhruva Natchathiram). கடந்த 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்டது. இப்படத்தில் சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ரிது வர்மா, திவ்யதர்ஷினி, விநாயகன், உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.