சென்னை:நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் ஆக்ஷன், கமர்ஷியல், ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படமாக உருவாகியுள்ள 'ரெய்டு' தீபாவளியை முன்னிட்டு இம்மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இயக்குநர் கார்த்தி இயக்கியுள்ள இப்படத்திற்கு, இயக்குநர் முத்தையா வசனம் எழுதியுள்ளார். இப்படத்தை எம் ஸ்டுடியோஸ், ஓப்பன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் மற்றும் ஜி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன.
இப்படம் குறித்து நடிகர் விக்ரம் பிரபு கூறியதாவது, "இயக்குநர் கார்த்தி படத்தின் கதையைச் சொன்னபோது அதில் ஆக்ஷன், எமோஷன், காதல், நடனம் மற்றும் பொழுதுபோக்கு ஆகியவை இருப்பதை உணர்ந்தேன். மேலும், நான் கமர்ஷியல் படம் நடிப்பது குறித்து எப்போதும் அதிகம் யோசிப்பேன். இப்போது இந்தப் படத்தில் இயக்குநர் கார்த்தி என்னை ஒரு கமர்ஷியல் ஹீரோவாக காட்டியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கூறியுள்ளார்.
பின்னர் 'ரெய்டு' படத்தின் இயக்குநர் கார்த்தி கூறும் போது, "சமூக பிரச்சனையுடன் கூடிய ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இந்த படம் இருக்கும். நான் படத்தின் திரைக்கதையை எழுதும்போது, கதாநாயகனின் கதாபாத்திரம் பக்கத்து வீட்டுப் பையன் போலவும், அதே சமயம் மாஸ் ஹீரோவாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதற்கேற்ப விக்ரம் பிரபு இருந்தார்.
மேலும், இந்தப் படத்திற்கு அவர்தான் சரியானவர் என்று ஒட்டுமொத்த டீமும் கருதியது. இந்த படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு முழு உழைப்பை விக்ரம் பிரபு கொடுத்துள்ளார். இயக்குநர் முத்தையாவின் வசனங்கள் இந்தப் படத்தை வணிக ரீதியாக எடுத்துச் செல்வதற்குப் பெரும்பலமாக அமைந்து, வெற்றியை ஈட்டித் தர இருக்கிறது" என்றார்.