சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அறியப்படுபவர், வெற்றிமாறன். பாலுமகேந்திராவின் பள்ளியில் இருந்து வந்த வெற்றி மாறன் தனது தரமான படைப்புகளான ஆடுகளம், வடசென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர். வெற்றிமாறன் தற்போது நடிகர் சூரியை கதையின் நாயகனாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் வரும் வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தில் சூரி கதையின் நாயகனாகவும் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். விடுதலை படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். விடுதலை சிறிய படமாக தொடங்கி தற்போது இரண்டு பாகம் வரை வளர்ந்துள்ளது.
விடுதலை படத்தின் முதல் பாகம் வெளியாகி அடுத்த சில மாதங்களிலேயே இரண்டாவது பாகமும் வெளியாக உள்ளது. இதனை முடித்துவிட்டு சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். கலைப்புலி தாணு தயாரிக்க உள்ள இப்படத்திற்காக சூர்யா, காளை ஒன்றை வாங்கி வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தது.
வெற்றிமாறனும் விஜய்க்கு கதை சொன்னதாக சமீபத்திய பேட்டிகளில் கூறியிருந்தார். ஆனால், அடுத்தடுத்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படங்களினால் விஜய்யை வைத்து இயக்குவது சாத்தியமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் விடுதலை படம் பற்றிய ஒரு நேர்காணலில் டாணாக்காரன் இயக்குநர் தமிழ், விஜய் வெற்றிமாறன் கூட்டணி குறித்து பதிலளித்துள்ளார்.