சென்னை:நடிகர்விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார். வம்சி இதற்கு முன் தமிழில் நடிகர் கார்த்தி, நாகர்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில் விஜய்யை வைத்து படம் இயக்குகிறார் என்றதும் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இப்படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். தமன் இசை அமைத்திருந்தார். மேலும் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷ்யாம் , பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 11-ம் தேதி வெளியான இப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதோடு உலகம் முழுவதும் இதுவரை ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்களைக் கடந்தபோதும் இன்று வரை நிறைய திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.