சென்னை: தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டுமின்றி வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என அனைத்து விதமான வேடங்களிலும் நடிப்பவர். தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் நடித்து வெளியான படம் ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’. இப்படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான பி. ஆறுமுக குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் விஜய் சேதுபதி கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா மலேசியா நாட்டின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஈப்போ எனும் மாநகரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதையும் படிங்க: 50 நாட்களைக் கடந்த விடுதலை பார்ட் 1 - படக்குழுவினர் உற்சாகம்!
இந்தத் திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, யோகி பாபு, ருக்மணி வசந்த், பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆர்.கோவிந்தராஜ் கவனிக்க, கலை இயக்கத்தை ஏ.கே. முத்து மேற்கொள்கிறார்.