சென்னை:தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு சேவைகளை செய்து வருகிறார். இது பெரும்பாலும் பாராட்டுக்குரிய ஒன்றாக உள்ள நிலையில், நடப்பாண்டு முதல் ஒரு புது முயற்சியை விஜய் மக்கள் இயக்கம் எடுத்து உள்ளது. இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா நேற்று (ஜூன் 17) நடைபெற்றது.
சென்னையை அடுத்த நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், விஜய் கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் சால்வை அணிவித்து, சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையினை வழங்கினார். இதற்காக நேற்று காலை 10.30 மணிக்கு மேல் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு விஜய் வந்தார்.
அப்போது, அவர் வீட்டில் இருந்து புறப்படும்போதே ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், விஜய் வந்த கார் ஊர்ந்தே வந்தது. பின்னர், நிகழ்ச்சி மேடையில் ஏறி அனைவருக்கும் கையசைத்த விஜய், பின்னர் மேடை முன்னால் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் இடையே அமர்ந்தார். அப்போது, அவருக்கு மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் நினைவுப்பரிசினை வழங்கினார்.
இதனையடுத்து மாணவர்கள் மத்தியில் சென்று அமர்ந்தார். தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சி மேடையில் பேசிய விஜய், கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக 'அசுரன்' படத்தின் இறுதிக் காட்சியில் இடம் பெற்றிருந்த வசனத்தை கூறினார்.
மேலும் பேசிய அவர், “உங்களின் (மாணவர்கள்) குணம் மற்றும் சிந்திக்கும் திறனே நீங்கள் கற்ற கல்வியை முழுமையாக்கும்” எனத் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் போன்ற தலைவர்களைப் பற்றி படியுங்கள் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.