சென்னை: ஷிவா நிர்வானா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் குஷி. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா இடையேயான காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றியால் குஷி அடைந்துள்ள நடிகர் விஜய் தேவரகொண்டா இந்த படத்தின் மூலம் தான் சம்பாதித்ததிலிருந்து 1 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்க முடிவு செய்து இருக்கிறார். இது குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “உங்களுடன் குஷியைப் பகிர்ந்து கொள்வதற்காக எனது சம்பாத்தியத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை உங்கள் குடும்பங்களுக்குத் தருகிறேன். அடுத்த பத்து நாட்களில் 100 குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்குவேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கிராமத்து காமெடியில் களமிறங்கும் யோகி பாபு.. "காவல்துறை உங்கள் நண்பன்" கதாநாயகனுடன் கூட்டணி!
என்னுடைய வெற்றியிலும் மகிழ்ச்சியிலும் நீங்களும் பங்கு கொள்ள வேண்டும். நான் சம்பாதித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாவிட்டால், அதெல்லாம் வீண். நீங்கள் அனைவரும் என் குடும்பம் போன்றவர்கள். சமூக ஊடகங்களில் தேவரா குடும்பம், குஷியைப் பரப்பும் விண்ணப்பப் படிவம் வெளியிடப்படும் என்றும், 100 குடும்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, ஹைதராபாத்தில் நடைபெறும் குஷி நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்தத் தொகை வழங்கப்படும். அப்போது தான் குஷியின் வெற்றி எனக்கு முழுமையடையும்" என்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்த தகவலை அவரது X சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்த அவர், ரசிகர்கள் 1 லட்ச ரூபாயைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான படிவத்தையும் வெளியிட்டுள்ளார். படம் வெற்றி பெற்றதும் அதைக் கொண்டாட வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்லும் பிரபலங்களுக்கு மத்தியில் விஜய் தேவரகொண்டா செய்துள்ள இந்த செயல் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ் சினிமா கொண்டாடிய சிறந்த ஆசிரியர்கள்.. ஆசிரியர் தின சிறப்பு தொகுப்பு!