சென்னை: நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் ஹரியின் படங்கள் எப்போதுமே ஒருவித பரபரப்புடன் பார்வையாளர்களை திருப்திப்படுத்தும். கடைசியாக அருண் விஜய் நடித்த யானை என்ற படத்தை இயக்கி இருந்தார்.
தற்போது தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹரி - விஷால் கூட்டணியில் ரத்னம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த புதிய படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்து உள்ளது. விஷால் படத்திற்கு முதல் முறையாக இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். சென்னை ஆதம்பாக்கத்தில் மதுபானக் கடை போன்று செட் அமைத்து இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகளை படக்குழுவினர் எடுத்து வந்துள்ளனர்.