சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவரது படங்கள் வெளியாகும் தினத்தை அவரது ரசிகர்கள் பண்டிகை நாளாகக் கொண்டாடுவது வழக்கம். குறிப்பாக இவரது படம் குறித்த அப்டேட்டுகளும், அதற்காக அவரது ரசிகர்கள் செய்யும் செயல்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகும்.
முன்னதாக இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'துணிவு'. இப்படம் பல வகையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் ரீதியாகச் சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து லைகா தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் திடீரென விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து விலகியதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் பகிரப்பட்டன.
அதன் பின்னர் நடிகர் அஜித் குமார், தனது பைக்கில் உலக சுற்றுலா கிளம்பியதை அடுத்து, அவரது அடுத்த படத்தைக் குறித்து எந்த ஒரு தகவலும் இல்லாமல் இருந்தது. தொடர்ந்து சில மாதங்கள் கழித்து, லைகா நிறுவனம் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பகிரப்பட்டன.
அதை உறுதிப்படுத்தும் வகையில், லைகா நிறுவனம் நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளன்று வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பில், இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்தது.