சென்னை:இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படுகிறார். இவரது இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி ஆடுகளம், விசாரணை ஆகிய படங்கள் தேசிய விருதும் பெற்றன. வழக்கமாக சிறுகதைகள் மற்றும் நாவல்களை வைத்து திரைப்படங்கள் எடுப்பவர் வெற்றி மாறன். தற்போது ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு "விடுதலை" என்ற தலைப்பில் படமாக எடுத்து வருகிறார்.
காவல் துறையை கதைக்களமாக கொண்ட இந்தப் படத்தில் பிரமாண்ட சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் எல்ரெட் குமார் & உதயநிதி ஸ்டாலின் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக இப்படம் தயாராகிறது. இளையராஜா இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சிறுமலை, கொடைக்கானல், ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நடைபெற்றது. சூரி கதையின் நாயகனாக நடிப்பதாலும் வெற்றிமாறன் இயக்குநர் என்பதாலும் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இளையராஜா இசையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் காட்டுமல்லி என்ற பாடல் தற்போது ரசிகர்களின் ஃபேவரைட் பாடலாக உள்ளது.