சென்னை: தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவான ‘விடுதலை பாகம் 1’. கடந்த மார்ச் 31 அன்று திரையரங்குகளில் வெளியானது. வெற்றிமாறன் இயக்கத்தில் இதுவரை வெளியான திரைப்படம் அனைத்துமே வணிகரீதியானவும் திரைப்படைப்பாகவும் கவனிக்கப்பட்டவை. ஆடுகளம் தொடங்கி அசுரன் வரை தனது ஒவ்வொரு படங்களின் மூலமும் ரசிகர்களுக்கு திரை விருந்து படைத்தவர். எழுத்தாளர்களின் கதைகளை திரைவடிவமாக மாற்றுவதில் கைதேர்ந்தவரான வெற்றிமாறன் தற்போது இயக்கி சமீபத்தில் வெளியான திரைப்படம் விடுதலை.
யாரும் எதிர்பார்க்காத வகையில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் நடித்து வந்த சூரியை கதையின் நாயகனாக்கினார். இதுவே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. அதேநேரம், விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் நடிப்பும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக கொண்டு இப்படத்தை இயக்கியிருந்தார். இளையராஜா இசை அமைத்திருந்தார். சிறிய முதலீட்டில் தொடங்கப்பட்ட இப்படம் அப்படியே மூன்று மடங்கு உயர்ந்தது. இதனால் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி விடுதலை முதல் பாகம் கடந்த மாத இறுதியில் வெளியானது. இப்படம் ''வாச்சாத்தி'' உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட படமாக இருப்பதாகப் படம் பார்த்தவர்கள் கூறினர். அதேநேரம், வெற்றிமாறனின் விசாரணை படத்தின் காவல் துறை சம்பவங்களையே விஞ்சும் அளவிற்கு, விடுதலை பட காவல் துறை காட்சிகள் உணர்வுப் பூர்வமாக ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் ரசிகர்களின் சிலாகிப்பாக இருக்கிறது.
சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைவரது நடிப்பும் பேசப்பட்டது. இளையராஜாவின் ‘காட்டு மல்லி’ பாடல் ரசிகர்களின் காதல் வாசனையைத்தூண்டி மீண்டும் 80களின் பிற்பகுதிக்கே கொண்டு சென்றது. துணைவன் சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்றாலும் இதில் வெற்றிமாறனின் திரைக்கதை படத்தை ரசிக்கும்படி செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது.
காவல்துறையினரின் அடக்குமுறைகளை ஏற்கனவே விசாரணை படத்தில் பார்த்திருந்தாலும் இப்படத்தில் இன்னமும் சற்று அதிகமாக காட்சிபடுத்தியிருந்தனர். மக்கள் படையைப் பிடிக்க ஊருக்குள் நுழையும் காவல்துறை பெண்களை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் பார்ப்போரை கலங்கவைத்தது.
இந்த நிலையில் படம் வெளியாகி ஒருமாதம் ஆன நிலையில் எப்போது ஓடிடியில் விடுதலை வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இவ்வாறு பல சாராம்சங்களைக் கொண்ட இப்படம், வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், பிரபல ஓடிடி தளமான ஜீ5 (ZEE5) தமிழில் விடுதலை படத்தின் முதல் பாகம் இன்று (ஏப்ரல் 28) வெளியாகி உள்ளது
இந்நிலையில் இன்று விடுதலை முதல் பாகம் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்ளுக்கு உற்சாகத்தை கொடுத்த நிலையில் திரையரங்குகளில் வெளியானதை கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது. டைரக்டர் கட் எனப்படும் கிட்டத்தட்ட 2:30 மணி நேரம் ஓடக்கூடிய படமாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. எந்தெந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன என்று ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து வருகின்றனர். முதல் பாகம் வெளியான நிலையில் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:PS2: 'மனசு நிறைஞ்சிருக்கு' - ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தபின் அருள்மொழிவர்மன் ரவி!